விஜய் ஹசாரே டிராபி சி பிரிவில் முதலிடம் பிடிக்க தமிழகம்-குஜராத் பலப்பரீட்சை

ஜெய்பூர்: விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் சி பிரிவில் முதலிடம் பிடிக்க தமிழகம் - குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சையில் இறங்குகின்றன. சி பிரிவில் மொத்தம் 10 அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை லீக் ஆட்டங்களில் விளையாடி வருகின்றன. தமிழகம், குஜராத் அணிகள் இதுவரை விளையாடி உள்ள 8 லீக் ஆட்டத்திலும் தொடர்ச்சியாக வென்று தலா 32 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கின்றன. மொத்த ரன் ரேட் அடிப்படையில் தமிழக அணி (1.908) முதலிடத்திலும், குஜராத் (1.666) 2வது இடத்திலும் உள்ளன. இதே பிரிவில் பெங்கால் (20 புள்ளி), சர்வீசஸ் (20), ஜம்மு காஷ்மீர் (16) அணிகள் டாப் 5ல் இடம் பெற்றுள்ள நிலையில் திரிபுரா (12), ரயில்வேஸ் (12), ராஜஸ்தான் (10), மத்தியப் பிரதேசம் (10), பீகார் (0) அணிகள் பின்தங்கியுள்ளன. இந்த நிலையில், தமிழக அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று குஜராத் அணியை சந்திக்கிறது.

இப்போட்டி ஜெய்பூரியா வித்யாலயா மைதானத்தில் காலை 9.00 மணிக்கு தொடங்குகிறது. இரு அணிகளுமே இதுவரை தோல்வியை சந்திக்கவில்லை என்பதால், தொடர்ச்சியாக 9வது வெற்றியை வசப்படுத்தி சி பிரிவில் முதலிடம் பிடிக்க வரிந்துகட்டுகின்றன. தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணியில் முகுந்த், முரளி விஜய், அபராஜித், விஜய் ஷங்கர், வாஷிங்டன் சுந்தர், ஷாருக் கான் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல பார்மில் உள்ளனர். பந்துவீச்சிலும் முருகன் அஷ்வின், முகமது, நடராஜன், கவுஷிக் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அதே சமயம் பார்திவ் பட்டேல் தலைமையிலான குஜராத் அணியில் பார்கவ் மெராய், மன்பிரீத் ஜுனேஜா, அக்சர் பட்டேல், பியுஷ் சாவ்லா ஆகியோர் தமிழக அணிக்கு நெருக்கடி கொடுக்க காத்திருக்கின்றனர்.

Related Stories: