ஆட்சிக்கு வந்ததும் மக்கள் குறை தீர்க்கப்படும் உள்ளாட்சியில் நல்லாட்சி தந்தது திமுக: நாங்குநேரி பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

நெல்லை: உள்ளாட்சியில் நல்லாட்சி தந்தது திமுக, திண்ணை பிரசாரத்தில் என்னிடம் மக்கள் கூறும் குறைகள் எல்லாம் திமுக ஆட்சிக்கு வந்ததும் தீர்க்கப்படும் என்று நாங்குநேரி தொகுதி தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார். நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து 2ம் கட்டமாக நேற்று மாலை தளபதிசமுத்திரம், பொன்னாக்குடியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேன் பிரசாரத்தை துவக்கினார்.  அப்போது அவர் பேசியதாவது:

 ஜெயலலிதா சர்வாதிகாரியாக இருந்தாலும் மத்திய அரசுக்கு பயந்தது கிடையாது. ஆனால் எடப்பாடி மத்திய அரசுக்கு பயந்து, அஞ்சி, கூனி குறுகி மண்டியிட்டு உள்ளார். சசிகலாவின் காலில் விழுந்து பதவியை பெற்ற அவா்,  தற்போது  ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள மத்திய அரசிடம் மண்டியிட்டு கிடக்கிறார். கடந்த 2 நாட்களாக இந்த தொகுதியில் எடப்பாடி பிரசாரம் செய்தார். 8 ஆண்டுகளாக அவர்கள் தான் ஆட்சியில் இருக்கின்றனர். எதாவது திட்டங்களை, சாதனைகளை  சொல்லி இருக்கிறாரா? ஏதோ திமுக தான் ஆட்சி நடத்துவது போன்று என்னை பற்றி வாய்க்கு வந்ததெல்லாம் பேசி விட்டு சென்றிருக்கிறார். நான் ஊர், ஊராக திண்ணை பிரசாரம் செய்கிறேன். பொய் பிரசாரம் செய்கிறேன் என்கிறார். திண்ணை  பிரசாரம் என்பது திமுக தொடர்ந்து செய்து வரும் பிரசாரம்.

பொதுமக்களிடம் வாங்கும் மனுக்கள் அனைத்தையும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பரிசீலித்து நிறைவேற்ற வேண்டியது நமது கடமை. ஏற்கனவே நான் எத்தனை பொறுப்புகளில் இருந்துள்ளேன் என்பது உங்களுக்கு தெரியும். தற்போது  எம்எல்ஏவாக, எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறேன். நான் சென்னை மாநகராட்சியில் மேயராக இருந்த போது வாரந்தோறும் மனுக்களை வாங்குவதை வழக்கமாக வைத்திருந்தேன். உள்ளாட்சிதுறை அமைச்சராக இருந்தபோது உள்ளாட்சியில்  நல்லாட்சி என்று பெயரெடுத்து கொடுத்தேன்.

 ஆனால் தற்போது உள்ளாட்சித்துறை எப்படி இருக்கிறது. வேலுமணி என ஒருவர் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருக்கிறார். லைட் வாங்குவதில் ஊழல், சாலை பணிகளில் ஊழல், ஏன் குப்பை அள்ளுவதிலும் கூட ஊழல் செய்துள்ளனர்.    என்னிடம் ஆட்சியிலிருக்கும் போது மனு கொடுத்தால் அதை செய்து கொடுத்து விடுவேன். இப்போது தரும் மனுக்களை அதிகாரிகள், அமைச்சர்களுக்கு அனுப்புகிறேன். சட்டமன்றத்தில் பேசுவோம், மக்களவையில் பேசுவோம். மக்களுக்காக  போராடுவோம். எப்போதும் மக்களுக்காக போராடுகிற, வாதாடுகிற இயக்கம் தான் திமுக. அதிமுக ஆட்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் சேர்த்து 122 எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்களில் யாராவது, ஒருவராவது தொகுதிகளுக்கு சென்று மக்கள் பிரச்னை என்ன என குறை கேட்டது உண்டா? இதனால் தான் பிரச்னைகளை  தீர்த்து வைக்க மக்களை தேடி நாங்கள் வந்துள்ளோம்.

 மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், சாலை வசதி, பஸ் வசதி, பள்ளி கட்டிடம், முதியோர் உதவித்தொகை, 100 நாள் வேலை திட்டம் போன்ற இதைக்கூட முறையாக தீர்த்து வைக்க முடியாத ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது.  வெளிநாடு  செல்கிறேன். லண்டன், அமெரிக்கா, துபாய் செல்கிறேன் என எடப்பாடி கூறினார். முதலீடுகளை கொண்டு வரப்போகிறேன் என்றார். எவ்வளவு முதலீடுகள் வந்துள்ளன? எத்தனை தொழிற்சாலைகளை கொண்டு வந்துள்ளீர்கள்? இதைப்பற்றி  இதுவரை சொல்லவில்லை. திமுக ஆட்சியின் போது ஸ்டாலின் எதற்காக வெளிநாடு சென்றார் என்கிறீர்கள். நான் சுற்றுலாவா சென்றேன். ஜப்பான் நாட்டுக்கு குடிநீர் திட்டத்துக்காகவும், மெட்ரோ திட்டத்துக்காகவும் சென்றேன். மேயராக இருந்தபோது மாநாட்டிற்காக  அமெரிக்கா சென்றேன். முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி கொள்ளையடித்த பணத்தை முதலீடு செய்ய வெளிநாடு சென்றாரா? என்று கேள்வி எழுப்பினேன். அதற்கு ஸ்டாலினுக்கு சுவிஸ் வங்கியில் பணம் இருக்கிறது என்கிறார். கடந்த 8 ஆண்டுகளாக நீங்கள் தானே ஆட்சியில் இருக்கிறீர்கள். மத்திய அரசும் உங்களுக்கு துணையாக இருக்கிறது. சுவிஸ் வங்கியில் எனக்கு பணம் இருப்பதாக எடப்பாடி நிரூபித்தால் நான் ராஜினாமா செய்து விட்டு அரசியலை விட்டே  செல்கிறேன். எடப்பாடி பழனிசாமி ஊரை விட்டு ஓட தயாரா?. இந்த அக்கிரம ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில் நாங்குநேரி இடைத்தேர்தல் முடிவு அமைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக காலையில் களக்காடு அருகே கடம்போடுவாழ்வு கிராமத்தில் நடந்த திண்ணை பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ஜெயலலிதாசாவில் மர்மம் இருப்பதாக தற்போது துணை முதல்வராக உள்ள ஓ. பன்னீர்செல்வம் முதலில்  கூறினார். தன்னுடைய முதல்வர் பதவியை பிடுங்கியதும், அவர் ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் நடத்தி விசாரணை கமிஷன் வேண்டுமென்றார். இப்போது அதை விட்டுவிட்டார். தற்போது அமைச்சர்கள் ஜெயலலிதா படத்தை  பாக்கெட்டுகளில் வைத்துள்ளனர்.  ஊரை ஏமாற்றி கொள்ளையடிக்க வைத்துள்ளனர் என்றார்.

Related Stories: