விக்கிரவாண்டி பிரசாரத்தில் அமைச்சர் கருப்பணன் குத்தாட்டம் : வைரலாகும் வீடியோ

சென்னை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் வாக்கு சேகரிப்பின் போது சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் குத்தாட்டம் போடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக சார்பில் முத்தமிழ்செல்வன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் செம்மேடு கிராமத்தில் நேற்று வாக்கு சேகரித்தார்.  அப்போது, அவருக்கு அதிமுக நிர்வாகிகள் சார்பில் மேள, தாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர் வருவதை அறிந்து கிராம மக்கள் ஏராளமானோர் அப்பகுதியில் திரண்டனர். அப்போது அமைச்சர் கே.சி.கருப்பணன், மேள, தாளங்கள் இசைக்கும் இடத்துக்கு சென்றார். இசைக்கேற்ப குத்தாட்டம் போட்டார்.

இதை அங்கிருந்தவர்கள் தங்களின் செல்போனில் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தன்னுடைய தொகுதியில் டெங்கு காய்ச்சல் பரவி ஏராளமானோர் இறந்து வரும் நிலையில் வாக்கு சேகரிப்பில் தொகுதி மக்களை மறந்து அமைச்சர் குத்தாட்டம் போடுவதா என அமைச்சருக்கு எதிராக சமூக வலைதளங்களில் மக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 2017ம் ஆண்டில் திருப்பூர் மாவட்டம் நொய்யல் ஆற்றில் நுரை பொங்கி வழிந்தது. இதற்கு சாயக்கழிவுகளால் ஏற்பட்ட மாசுபாடே காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். ஆனால், மக்கள் சோப்பு போட்டு குளிப்பதால்தான் நொய்யல் ஆற்றில் நுரை பொங்குகிறது என அமைச்சர் கருப்பணன் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: