ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தை மீண்டும் கைது செய்ய அனுமதி : அமலாக்கத்துறைக்கு சிபிஐ சிறப்பு கோர்ட் உத்தரவு

புதுடெல்லி : ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரிக்க தடையில்லை என தெரிவித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், தேவைப்பட்டால் அவரை கைது செய்து விசாரிக்கவும் அனுமதி வழங்கியுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து அவரை கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் சிபிஐ கைது செய்தது. பின்னர், அவரை டெல்லி ரோஸ் அவென்யூவில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தது. இதைத் தொடர்ந்து, அவருக்கு மூன்று முறை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டதால் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கும்படி டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை கடந்த வாரம் மனு தாக்கல் செய்தது. இது, நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ‘ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக சிபிஐ தரப்பில் ஏற்கனவே அனைத்து விசாரணைகளும் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. இதில் புதியதாக ஒன்றும் விசாரிக்க தேவையில்லை. மேலும், இந்த வழக்கில் அமலாக்கத் துறையும், சிபிஐ கேட்ட கேள்விகளைதான் கேட்பார்கள். அதில், எந்த மாற்றமும் இருக்காது. அதனால் ஒரே வழக்கில், ஒரே சம்பவத்துக்காக இரண்டு முறை கைது என்பது தேவையில்லாத ஒன்றாகும். அதனால், அமலாக்கத்துறை கோரிக்கையை நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும்,’’ என வாதிட்டார்.  

இதற்கு, அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டார் துஷார் மேத்தா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் தனது வாதத்தில், “ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் கையூட்டாக கோடிக்கணக்கில் தொகை பெற்றுள்ளார். இது சட்ட விரோதமான ஒன்றாகும். அதற்கான ஆதாரங்கள் உள்ளன. இது குறித்து புலனாய்வு அமைப்புகள் மூலம்தான் விசாரிக்க முடியும். அதனால், இந்த விவகாரத்தில் அமலக்கத் துறை காவல் கேட்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்,’’ என்றார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி அஜய் குமார் குஹர், இந்த வழக்கின் இறுதி உத்தரவை அக்டோபர் 15ம் பிறப்பிப்பதாக அறிவித்தார். இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி குஹர் நேற்று தீர்ப்பை வழங்கினார். அவர் தனது தீர்ப்பில், “ஐஎன்எக்ஸ் மீடியா  முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்க எந்த தடையும் கிடையாது. மேலும், வழக்கிற்கு தேவைப்படும் பட்சத்தில் அவரை கைது செய்தும் விசாரிக்கலாம். இதில், காவலில் எடுத்த அடுத்த 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தை ஆஜர்படுத்த வேண்டும். அவரை பொதுமக்கள் முன்னிலையில் விசாரிப்பதோ, கைது செய்வதோ என்பது அவரின் கண்ணியம் சார்ந்த ஒன்றாக இருக்காது,’’ என உத்தரவிட்டார்.

இதையடுத்து, ‘ப.சிதம்பரத்திடம் நாளை (இன்று) மாலை 4 மணிக்கு திகார் சிறைக்கு சென்று முதல்கட்டமாக விசாரணை நடத்துகிறோம். தேவைப்படும் பட்சத்தில் அவரை உடனடியாக அங்கிருந்து கைது செய்து எங்களின் காவலில் அலுவலகத்தில் வைத்து விசாரித்து விட்டு வியாழக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறோம்,’ என நீதிபதியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு நீதிபதி ஒப்புதல் அளித்தார். இதனால், ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை இன்று கைது செய்ய வாய்ப் உள்ளதாக தெரிகிறது.

உச்ச நீதிமன்றத்தில் இன்றும் ஜாமீன் மனு மீது விசாரணை

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பானுமதி தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, “ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்பதற்காகவே பல்வேறு குற்றச்சாட்டுகளை சிபிஐ கூறுகிறது. அவரை சிபிஐ அதிகாரிகள் ஒன்றும் காட்டுக்குள் கைது செய்யவில்லை. அவரது வீட்டில்தான் கைது செய்தார்கள்,’’ என வாதிட்டார். சிபிஐ தரப்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா, இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் தனது வாதத்தில், ‘‘ப.சிதம்பரத்தை ஜாமீனில் வெளியே விட்டால் அவர் கண்டிப்பாக வெளிநாடு தப்பிச் சென்று விடுவார் என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கை இன்றைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Related Stories: