நாங்குநேரி தேர்தலுக்கு காங்கிரஸ் காரணமா? : கே.எஸ்.அழகிரி மறுப்பு

சென்னை: அரசின் மீதான மக்களின் கோபத்தை திசை திருப்ப நாங்குநேரி இடைத்தேர்தலுக்கு காங்கிரஸ்தான் காரணம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலிவான பிரசாரம் மேற்ெகாள்வதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பிரசாரத்தை மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இடைத்தேர்தல் வருவதற்கு காரணமே காங்கிரசின் சுயநலம்தான் என்று பேசியிருக்கிறார். அரசின் மீதான தொகுதி மக்களின் கோபத்தை திசை திருப்ப மலிவான பிரசாரத்தை முதல்வர் மேற்கொண்டு வருகிறார். நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளர் வெளியூரைச் சேர்ந்தவர் என்ற பொய்ப் பிரசாரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்திருக்கிறார். அப்படிப் பார்த்தால் போடிநாயக்கனூர், பர்கூர், காங்கேயம், ஆண்டிப்பட்டி, ரங்கம், ராதாகிருஷ்ணன் நகர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட ஜெயலலிதா அந்தந்த ஊரைச் சேர்ந்தவரா. திருநெல்வேலி மேயராக இருந்த விஜிலா சத்தியானந்தை மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்த காரணத்தால் அங்கு இடைத்தேர்தல் ஏற்பட்டது.

இந்த இடைத்தேர்தலை மக்கள் மீது திணிக்கப்பட்டதாக எடப்பாடி ஏற்றுக் கொள்வாரா. பல ஆண்டுகளாக கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் உறுப்பினர்களே எம்பி ஆன நிலையில், 2014 தேர்தலில் பாஜவின் பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றது மதச்சார்பற்ற சக்திகளுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. 2019ல் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தேர்தலில் வகுப்புவாத சக்திகளை வீழ்த்த மக்களுக்கு நன்கு அறிமுகமான எச்.வசந்தகுமார் நிறுத்தப்பட்டு, 2.6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். லட்சிய நோக்கத்திற்காக அவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டதால் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்கு அரசியல் உள்நோக்கத்துடன் வேறு காரணம் கூறுவது திசைதிருப்புகிற செயலாகும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: