ராஜிவ் கொலையில் குற்றவாளிகளை அடையாளம் காணலாம் சீமானை சிபிஐ கைது செய்ய வேண்டும் : அதிகாரிகளிடம் காங்கிரஸ் புகார்

சென்னை: சீமானை கைது செய்து விசாரித்தால் ராஜிவ் கொலை பின்னணியில் உள்ளவர்களை அடையாளம் காணலாம் என்று சிபிஐ அதிகாரியிடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் சிபிஐ மூத்த கண்காணிப்பாளர் புனிதமணியிடம், தமிழக காங்கிரஸ் சார்பில் சட்டப்பிரிவு இணை செயலாளர் எஸ்.கே.நவாஸ் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: பெரும்புதூரில் நடந்த சம்பவத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிபிஐ நடத்திய புலன் விசாரணையில் சில தேச விரோத சக்திகள் இந்த கொலையை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களுக்கு நீதிமன்றம் மூலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களுக்கான தண்டனையை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.

இந்நிலையில் கடந்த 11ம்தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற அரசியல் சார்ந்த பொதுக்கூட்டத்தில், ‘‘ராஜிவ் காந்தியை கொலை செய்தவர்களின் செயலை பெருமையாக பேசுகிறார். அந்த கொலையில் தானும் ஒரு ஆள் என்று சொல்கிறார். கூட்டத்தை தொடர்ந்து நடந்த பத்திரிகையாளர் சந்திப்பிலும், மேடையில் பேசிய பேச்சில் இருந்து பின்வாங்காமல் அதையே திரும்பவும் சொல்லிவிட்டு இது சம்பந்தமாக என் மீது வழக்கு தொடர்ந்தால் சட்டப்படி சந்திப்பேன்’’ என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே ராஜிவ் கொலை வழக்கில் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. தற்போது இந்த வழக்கில் சீமானை கைது செய்து விசாரணை நடத்தினால், ராஜிவ் கொலை வழக்கில் பின்னணியில் உள்ளவர்களை அடையாளம் காண முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தாம்பரம் போலீசிலும் புகார்

ராஜிவ் காந்தி பற்றி விமர்சனம் செய்த சீமான் மீது தாம்பரம் காவல் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் புகார் செய்துள்ளனர். விக்ரவண்டி இடைத்தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், ராஜிவ் காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவரது பேச்சு காங்கிரஸ் கட்சியினர் இடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வி.ஆர்.சிவராமன் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

Related Stories: