திருச்சி நகைக்கடையில் கொள்ளை போன நகைகள் மீட்பு: நகைகளை காட்சிப்படுத்திய பெங்களூரு போலீஸ்!

பெங்களூரு: திருச்சி நகைக்கடையில் கொள்ளை போன ரூ.13 கோடி மதிப்பிலான நகைகள் பெங்களுருவில் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 2ம் தேதி திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள லலிதா ஜுவல்லரியில் மொத்தம் 28 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.13 கோடி ஆகும். இந்த சம்பவத்தில் கொள்ளையர்களை பிடிப்பதற்காக 7 தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டது. மேலும் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக முருகன், கணேஷ், சுரேஷ், மணிகண்டன், கனகவல்லி என 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளை விவகாரத்தில் முக்கிய மூளையாக செயல்பட்ட முருகன் கடந்த 11ம் தேதி பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இதையடுத்து ஏற்கனவே பெங்களுருவில் நடைபெற்ற பல்வேறு கொள்ளை வழக்குகளில் முருகன் ஈடுபட்டிருந்ததால் பெங்களூரு போலீசார் முருகனை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையின் போது ஒரு குறிப்பிட்ட அளவிலான நகையை தனது சொந்த ஊரான திருவாரூரில் புதைத்து வைத்திருப்பதாக கூறப்பட்டிருந்தது. இதையடுத்து பெங்களூரு போலீசார் கடந்த ஞாற்றுக்கிழமையன்று சொந்த ஊருக்கு சென்று சோதனையிட்டனர். அங்கு காவிரி ஆற்றங்கரையோரத்தில் புதைத்து வைத்திருந்த 11 கிலோ நகைகளை மீட்டுள்ளனர். அந்த நகைகள் லலிதா ஜுவல்லரிக்கு சொந்தமான நகைகள் என்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் மீட்கப்பட்ட அனைத்து நகைகளும் பெங்களூரு-விற்கு கொண்டுவந்துள்ளனர்.

இந்த நகைகளை நீதிமன்றம் வாயிலாக உரிய ஆவணங்களை காட்டி தமிழக போலீசார் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் மீட்கப்பட்ட அனைத்து நகைகளையும் இன்று காட்சிக்கு வைக்கப்பட்டது. மேலும் திருச்சி கல்லணை ஆற்று பகுதிக்கு சென்று நகைகளை மீட்ட வீடியோவை வெளியிட்டுள்ளது. மீட்கப்பட்ட நகைகளை போலீசார் சரிபார்த்து வருகின்றனர். இதனை தொடர்ந்து, மதுரை வாடிபட்டியில் பிடிபட்ட கணேசன் என்பவரை போலீசார் கைது செய்யப்பட்டார். மேலும் கணேசனிடம் இருந்து ரூ. 2.30 கோடி மதிப்பிலான 6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கணேசன் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மேலும், அவரை அக்டோபர் 25ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: