சிலிண்டர் விநியோகிக்கும் நபர் டிப்ஸ் வசூலிக்கப்படுவதை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து நவம்பர் 1-ம் தேதி பதிலளிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவு

சென்னை: வீடுகளில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யும்போது, டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க உத்தரவிடக் கோரி, சென்னை அண்ணனூரைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில் கேஸ் சிலிண்டரை வீடுகளுக்கு டெலிவரி செய்பவர்கள் ரசீதில் உள்ள தொகையைவிட, வீடுகளுக்கு ஏற்ப 20 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை கூடுதலாக வசூலிப்பதாகவும், இதுகுறித்து புகார் தெரிவித்தும் எண்ணெய் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிலிண்டர் டெலிவரி செய்யும் போது கூடுதல் கட்டணம் (டிப்ஸ்) வசூலிக்கப்படுவதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என எண்ணெய் நிறுவனங்களுக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இது தொடர்பாக ஆயிரக்கணக்கானோர் புகார் அளித்தும் எண்ணெய் நிறுவனங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. தொடர்புடையவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படுள்ளதாகவும் சிலர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அந்த விவரங்கள் ஏன் அந்தந்த எண்ணெய் நிறுவனங்களின் இணையதளத்தில் வெளியிடப்படவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், டிப்ஸ் இல்லை என தெரிவித்தால் அடுத்த முறை சிலிண்டர் வினியோகம் செய்யும் போது வீடு பூட்டபட்டுள்ளதாக தெரிவிக்கும் நிலை உள்ளதாகவும் கூறினர்.  டிப்ஸ் வசூலிக்கப்படுவதை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து நவம்பர் 1-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: