நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் கிரீன்பார்க் பள்ளிக்கு தொடர்பு: வருமான வரித்துறை அதிகாரிகள் சிபிசிஐடி-க்கு தகவல்

நாமக்கல்: வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய நாமக்கல் க்ரீன்பார்க் பள்ளிக்கு நீட் ஆள்மாறாட்ட வழக்கிலும் தொடர்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீட் ஆள்மாறாட்டத்தில் சிக்கிய மாணவர்கள் நாமக்கல் கிரீன்பார்க் நீட் பயிற்சி மையத்தில் பயின்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிரீன்பார்க் பள்ளியில் சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் சிபிசிஐடி போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். கிரீன்பார்க் கல்விக் குழுமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

வரிஏய்ப்பு செய்ததாக கிடைத்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனையானது கடந்த 4 நாட்களாக நடைபெற்றது. இந்த சோதனையில் கட்டுக்கட்டாக 2000 ரூபாய் நோட்டுக்கள் கொண்ட ரூ.80 கோடி பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் ரூ.150 கோடி வரை கணக்கில் வராத சொத்துக்கள் வைத்திருப்பது தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் அறிக்கையாக வெளியிட்டனர். நேற்றுடன் சோதனை நிறைவு பெற்ற நிலையில், அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணம் கட்டுக்கட்டாக இருந்த புகைப்படங்கள் வெளியானது. முக்கியமாக கிரீன்பார்க் குழுமம் நடத்தி வரும் நீட் பயிற்சி பள்ளியில் சோதனை தீவிரமாக நடைபெற்றது.

அதில், உதித்சூர்யா, இர்பான், உள்பட பெரும்பாலான மாணவர்கள் கிரீன்பார்க் நீட் பயிற்சி மையத்தில் பயின்றது தெரியவந்துள்ளது. நீட் ஆள்மாறாட்ட வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். நீட் பயிற்சி மையத்திற்கு கொடுத்த கட்டண ரசீதுகளை சோதனை செய்த போது, அதில் அதிகப்படியான பணம் வசூலிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதுவே, அதிகாரிகளுக்கு சந்தேகத்தின் முதல்படியாக இருந்தது. கட்டணம் தவிர்த்து தனியாக இந்த பணம் எதற்கு என்பது குறித்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, நீட் ஆள்மாறாட்ட வழக்கில் இவர்களுக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிபிசிஐடி அதிகாரிகளுக்கு வருமான வரித்துறையினர் தற்போது தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து, சிபிசிஐடி இது தொடர்பாக விசாரிக்குமா என்பது விரைவில் தெரியவரும்.

Related Stories: