×

ராஜூவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு: சீமான் மீது நடவடிக்கை எடுக்க விழுப்புரம் தேர்தல் அதிகாரிக்கு தலைமை தேர்தல் ஆணையர் உத்தரவு

சென்னை: கடந்த சில நாட்களுக்கு முன்பு விக்கரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் பரப்புரைக்காக தஞ்சனுர் என்ற பகுதிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரைக்காக வருகை தந்திருந்தார்.  பரப்புரையின் போது, ராஜீவ் காந்தியை நாங்கள் தான் கொன்றோம், நாங்கள் கொன்றது சரிதான் என்ற வகையில் பேசியிருந்தார். இவரது பேட்டி சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டது. இதனை தொடர்ந்து, நேற்று முன்தினம்  விக்கரவாண்டி காவல்நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. தங்கபாலு தலைமையில் காங்கிரஸ் மாநில செயல் தலைவா் எம்.பி.,விஷ்ணுபிரசாத், முன்னாள் எம்எல்ஏ முருகானந்தம், விழுப்புரம் மாவட்டத் தலைவா் பி.ரமேஷ்  மற்றும் அந்தக் கட்சியின் நிர்வாகிகள் ஆகியோர் காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயகுமாரிடம் புகார் மனு அளித்திருந்தனர்.  

அதில், விக்கிரவாண்டி இடைத்தேர்தல்  பிரசாரத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியை நாங்கள்தான் கொன்று புதைத்தோம் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இது தேச ஒற்றுமைக்கும்,  தேச பாதுகாப்புக்கும் ஊறு  விளைவிக்கின்ற செயலாகும். இதற்கு ஆதாரத்துடன் ஒலிநாடா வீடியோவும் இருக்கிறது. ஒரு தேசத்தின் முன்னாள் பிரதமரை இன துரோகி என்றும், நாங்கள்தான் படுகொலை செய்தோம் என்றும் ஒப்புதல்  வாக்குமூலம் அளித்த சீமான் மீது வழக்குப்பதிந்து உடனடியாக  கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுகொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து ராஜீவ்காந்தி கொலை குறித்து சர்ச்சைக்கூறிய  வகையில் பேசியதன் காரணமாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது  2 பிரிவுகளின் கீழ் விக்கிரவாண்டி போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க விழுப்புரம் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உத்தரவிட்டுள்ளார். மேலும், சீமான் பேசியது குறித்து  விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆணையிட்டுள்ளார்.

Tags : Raju ,Chief Election Commissioner ,election officer ,Viluppuram ,Seeman ,Rajiv Gandhi , Rajiv Gandhi assassination case: Chief Election Commissioner orders Viluppuram election officer to take action against Seeman
× RELATED பலூன் விளையாட்டும்… குழந்தை செல்லூர் ராஜூம்…