×

உயர்சிறப்பு அந்தஸ்து கிடைத்தாலும், மாநில அரசின் கட்டுப்பாட்டில் அண்ணா பல்கலை. இருக்க வேண்டும்: மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

சென்னை: நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களை சர்வதேச தரத்துக்கு உயர்த்தும் நோக்கில் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் திட்டத்தை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் 2017-ம் ஆண்டு  தொடங்கியது.இந்த திட்டத்தின்படி 10 அரசு கல்வி நிறுவனங்கள், 10 தனியார் கல்வி நிறுவனங்கள் என 20 உயர்கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்படும். அவ்வாறு சிறப்பு அந்தஸ்து பெறும் உயர்கல்வி நிறுவனங்கள் கல்வி முறை மற்றும்  நிர்வாகம் முழுவதும் தன்னாட்சி அதிகாரம் உடையவையாக இருக்கும்.

மேலும், இந்த கல்வி நிறுவனங்களுக்கு தலா ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசும், மாநில அரசும் வழங்கும். தமிழகத்தைப் பொறுத்தவரை மாநில அரசின் அண்ணா பல்கலைக்கழகம், மத்திய அரசின் IIT Madras, தனியார் கல்வி  நிறுவனங்களான வேலூர் VIT பல்கலைக்கழகம், கோவை அமிர்தா விஷ்வ வித்ய பீடம் ஆகியவை Institutions of Eminence எனப்படும் மாண்புமிக்க கல்வி நிறுவனங்கள் என்கிற சிறப்பு அந்தஸ்துக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இவற்றில் தமிழக அரசின் கல்வி நிறுவனமான அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசு 750 கோடி ரூபாயும், மாநில அரசு 250 கோடி ரூபாயும் வழங்க வேண்டும். இதே போல் மத்திய அரசின் கல்வி நிறுவனமான ஐஐடி மெட்ராசுக்கு  மத்திய அரசே 1000 கோடி ரூபாயை வழங்கும். மேலும் Institutions Of Eminence அந்தஸ்தை பெற்ற கல்வி நிறுவனங்கள் பாடத்திட்டங்களை வரையறுத்தல், புதிய பாடப்பிரிவுகளை உருவாக்குதல் உள்ளிட்ட பணிகளை பல்கலைக் கழக  மானியக்குழுவின் வழிகாட்டுதல் இன்றி முழுவதும் தன்னிச்சையாக செய்து கொள்ள முடியும்.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் தமிழக அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், நிதி பங்கீடு விவகாரத்தில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தமிழக  அரசு வழங்க வேண்டிய 250 கோடி ரூபாய் தொடர்பாக தற்போது வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்குவது குறித்து மத்திய அரசுக்கு  தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது. மேலும், உயர்சிறப்பு அந்தஸ்து கிடைத்தாலும், மாநில அரசின் கட்டுப்பாட்டில்தான் அண்ணா பல்கலைக்கழகம் இருக்க வேண்டுமென என்றும் கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Tags : Anna University ,state government ,Government of Tamil Nadu ,government , Despite the high status, Anna University is under the control of the state government. Must be: Government letter to the central government
× RELATED அண்ணா பல்கலையில் 3 பேராசிரியர்களுக்கு தொற்று