துணை முதல்வர் தொகுதியில்தான் இந்த அவலம்: அரசு பள்ளி சுவற்றை இடித்து குடிமகன்கள் அட்டகாசம்

போடி: போடி அருகே சிலமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் குடிமகன்கள் போதை தலைக்கேறி  சுற்றுச்சுவர்களை இடித்தும், உடற்பயிற்சி பொருட்களை உடைத்தும் அட்டூழியம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போடி - தேவாரம் சாலையில் சிலமலை உள்ளது. இங்கு ராசிங்கபுரம் சாலை குதுவல் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். தலைமை ஆசிரியர் உட்பட  பத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்  பணியாற்றி வருகின்றனர்.

இந்த பள்ளியைச் சுற்றி சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. ஆனால், பள்ளி முடிந்த பிறகு மாலை 6 மணிக்கு மேல் குடிமகன்கள்  இந்த தடுப்புச்சுவர்களை ஏறி குதித்து உள்ளே நுழைந்து டாஸ்மாக்  மதுபாட்டில்களை வாங்கி வந்து குடித்து கும்மாளம் அடித்து வருகின்றனர். மேலும் குடிமகன்கள் போதை தலைக்கேறி  அங்குள்ள சுற்றுச் சுவர்களை இடித்து தரைமட்டமாக்கி விட்டனர். இதன் பின் பள்ளி வளாகத்திலுள்ள உடற்பயிற்சி அறைக்குள் புகுந்து அங்குள்ள பயிற்சி கருவிகளையெல்லாம் அடித்து, உடைத்து அட்டூழியம் செய்துள்ளனர். நேற்று காலை பள்ளிக்கு சென்ற தலைமையாசிரியர் சுற்றுச்சுவர் இடிந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மேலும் பள்ளி வளாகத்தில் இருந்த உடற்பயிற்சி கருவிகளும் உடைக்கப்பட்டிருப்பதை கொண்டு அதிர்ந்து போனார்.இச்சம்பவம் குறித்து போடி புறநகர் காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டர் தர்மரிடம் புகார் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். அரசு பள்ளிக்கு முறையாக வாட்ச்மேன் நியமிக்காததால், இரவு நேரங்களில் பாதுகாப்பு இல்லாமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். அத்துடன் இப்பகுதியில் செல்ல முடியாத அளவிற்கு குடிமகன்களின் அட்டாகசம் அதிகரித்துள்ளதாக புகார் தெரிவித்தனர். தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தொகுதியில் அரசு பள்ளிக்குள் புகுந்து சுற்றுச்சுவரை சேதப்படுத்தி, அங்கிருந்த உடற்பயிற்சி கருவிகளை உடைத்து குடிமகன்கள் அட்டகாசம் செய்துள்ளது தொகுதி மக்களை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

Related Stories: