சென்னையிலும் வந்தாச்சு பிங்க் சாரதி

நன்றி குங்குமம் தோழி

பெங்களூரில் கடந்த ஜூன் மாதம் பிங்க் சாரதி எனப்படும் பெண்கள் பாதுகாப்புக்கான ரோந்து வாகனம் அறிமுகம் செய்யப்பட்டது. சென்னைக்கு எப்ப வரும் என பெண்கள் எதிர்பார்த்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி அம்மா ரோந்து வாகனம் என்ற பெயரில் இதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

“பொது இடங்களில் பெண்கள் பாதுகாப்பு”என்ற திட்டத்திற்காக டெல்லி, சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத், அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய 8 நகரங்களை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. நிர்பயா திட்டத்தின் கீழ் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் சென்னை மாநகருக்கு 40 வாகனங்கள் ரூ.6.8 கோடி செலவில் வழங்கப்பட்டுள்ளது.

பிங்க் நிறத்திலான டொயாட்டோ, இன்னோவா காரில் முன்னும் பின்னும் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இவை எடுக்கும் படங்கள் உடனுக்குடன் போலீஸ் கன்ட்ரோல் ரூமில் உள்ள கம்ப்யூட்டரில் பதிவாகும். இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீசார் தேவைப்பட்டால் உடனடியாக அனுப்பி வைக்கப்படுவார்கள்.

இது தவிர சுழலும் விளக்கு, சைரன் வசதியும் இந்த வாகனத்தில் உள்ளது. கேமராவின் அருகிலேயே அவசர கால தகவல் தொடர்பிற்காக மைக் ஒன்றும், அறிவிப்பு செய்யும் ஒலிபெருக்கியும் பொருத்தப்பட்டுள்ளது. பெண்களுக்கானது என்பதால் அதை குறிக்கும் வகையில் இந்த வாகனங்கள் அனைத்தும்  பிங்க் நிறத்தில் வர்ணம் பூசப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஏற்படுத்தியுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் திட்டத்தின் கீழ் நகரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்துடன் இணைக்கப்பட்டு அங்கு பணியாற்றும் பெண்காவலர்கள் இந்த வாகனத்தில் பணியில் ஈடுபடுவார்கள்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை, குழந்தைகள் கடத்தல் போன்ற புகார் வந்தால் இந்த ரோந்து வாகனம் அதிரடி நடவடிக்கையில் ஈடுபடும். குழந்தைகளுக்கான ஹெல்ப்லைன் நம்பர் 1091 மற்றும் பெண்களுக்கான ஹெல்ப்லைன் நம்பர் 1098 போன்ற எண்களில் தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்டவர் அல்லது உறவினர்கள் தகவல் தெரிவித்தால் இந்த ரோந்து வாகனத்தில் இருக்கும் பெண் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்படும்.

கல்வி நிறுவனங்கள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள், பெண்கள் பணிபுரியும் தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் இயங்கும் பகுதிகளிலும் சுழற்சி முறையில் பெண் போலீசார் ரோந்து பணிகளை மேற்கொள்வார்கள். சுமார் 46 லட்சம் பெண்கள் வசிக்கும் சென்னையில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் தொடர்பாக 2 ஆயிரத்து 108 வழக்குகள் பதிவாகியுள்ளது. 43 ஆயிரத்து 22 புகார்கள் பதிவாகியுள்ளன.

இந்த ரோந்து வாகனம் அறிமுகத்தை தொடர்ந்து சென்னையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இந்த ரோந்து வாகனம் மதுரை, திருச்சி, கோவை, நெல்லை உள்ளிட்ட இடங்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

பா.கோமதி

Related Stories: