வடகிழக்கு பருவமழை தொடங்கும் சூழல்: தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு...வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் வரும் 19-ம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் உருவாகியுள்ளதால் தமிழ்நாட்டில் வரும் 19-ம் தேதி வரை கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஈரோடு, சேலம், தருமபுரி, தூத்துக்குடி உள்பட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளையும், நாளை மறுநாளும் கடலோர தமிழகம், உள் தமிழகம் பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சென்னையின் பல்வேறு இடங்களில் நேற்றிரவு பரவலாக மழை பெய்தது. கோயம்பேடு, நுங்கம்பாக்கம், வேளச்சேரி, ஆலந்தூர், ஈக்காட்டுத்தாங்கல், ராமாபுரம், திருவல்லிக்கேணி, ஆழ்வார்பேட்டை, அடையாறு, அண்ணா சாலை, சைதாப்பேட்டை, தியாகராயநகர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்ததால், இதமான சூழல் நிலவியது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை:

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்றிரவு முதல் விடாது பெய்த கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் இன்று சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு கருதி மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னுரில் விடிய விடிய பெய்த கனமழையால் 11 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. உதகை - குன்னூர், மேட்டுப்பாளையம் சாலைகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மலை ரயில் செல்லும் பாதையில் ஏற்பட்டுள்ள மண்சரிவை சரிசெய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல மதுரை திருப்பரங்குன்றத்தில் அரை மணி நேரமாக பலத்த மழை பெய்து வருகிறது. மதுரை விமான நிலையம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் பலத்த மழை பெய்வதால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதையடுத்து திருச்சி மற்றும் அதன்சுற்றுவட்டாரகளில் கடந்த சில மணி நேரங்களாக மழை பெய்து வருகிறது.

Related Stories: