×

சிரியாவின் குர்தீஷ் படைகள் மீது தாக்குதல்: துருக்கி மீது பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா...அதிபர் டிரம்ப் அதிரடி

வாஷிங்டன்: சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு உள்நாட்டு போர் வெடித்தது. அப்போது, அரசு படைகளுக்கு எதிராக ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பெரும் பலம் பெற்று, நாட்டின் பல்வேறு பகுதிகளை பிடித்தது. ஐஎஸ் தீவிரவாதிகளை எதிர்த்து  அரசுக்கு ஆதரவாக ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகளும், குர்திஷ் போராளிகளுக்கு  ஆதரவாக அமெரிக்காவும் உள்நாட்டு போரில் களமிறங்கின. இதனால் சிரியாவே சின்னாபின்னமானது. அங்கிருந்து படிப்படியாக ஐஎஸ் தீவிரவாத அமைப்பு  விரட்டி அடிக்கப்பட்டது. இதில் முக்கிய பங்கு வகித்தது குர்து படைகள்தான். அவர்கள்,  அமெரிக்காவின் ஆதரவுடன் தீவிரவாதிகளை விரட்டி, ஐஎஸ் பிடியில் இருந்த நகரங்களை மீட்டனர். ஐஎஸ் தீவிரவாதிகள் விரட்டப்பட்டதால், சமீபகாலமாக  அங்கு போர் ஓய்ந்துள்ளது. இதற்கிடையே, அமெரிக்கா தனது படைகளை வாபஸ்  பெற்றுக் கொள்வதாக அதிபர் டிரம்ப் திடீரென அறிவிப்பு வெளியிட்டார். குர்து படைகளுக்கு தந்த ஆதரவை அவர் விலக்கிக் கொண்டார்.

இதனால், குர்து படைகளுக்கு எதிராக உள்ள அண்டை நாடான துருக்கி தாக்குதல் நடத்த பச்சைக் கொடி காட்டியது போன்றதாகி விட்டது. குர்திஷ் போராளிகள் துருக்கியில் பல்வேறு நாசவேலை செய்து வருவதாக அந்நாடு குற்றம்சாட்டி   வருகிறது. இந்தநிலையில், துருக்கி ராணுவப் படை கடந்த சில நாட்களாக எல்லைதாண்டிய தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இதனால் சிரியாவில் மீண்டும் 2011ல் இருந்த  மோசமான நிலை திரும்பியிருக்கிறது. கடந்த 3 நாளில் குர்து படையைச்  சேர்ந்த 227 போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர். துருக்கி எல்லையை ஒட்டிய 11 கிராமங்களை அந்நாட்டு ராணுவம் தங்கள் வசம் கொண்டு வந்துள்ளது.

இந்நிலையில், சிரியாவின் குர்தீஷ் படைகள் மீது தாக்குதல் நடத்தியதற்காக, துருக்கி மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. இது குறித்து அமெரிக்க டோனால்ட் டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், துருக்கி தலைவர்கள் தொடர்ந்து  அழிவு மற்றும் ஆபத்தான வழியை தேர்வு செய்தால், அந்நாட்டின் பொருளாதாரத்தை அழிக்க முழுமையாக தயாராக உள்ளேன். அமெரிக்கா - துருக்கி இடையே நடக்கும், 100 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட வர்த்தக பேச்சுவார்த்தையை  நிறுத்தி வைத்துள்ளேன். தொடர் மனித உரிமை மீறலில் ஈடுபடுபவர்கள், அமைதி ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்துபவர்கள் மீது கூடுதல் தடை விதிக்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

துருக்கி மீது தடை விதிக்கப்படுவது குறித்து அமெரிக்க பிரதிநிதித்துவ சபை தலைவர் நான்சி பெலோசிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், துருக்கி விவகாரம், தேசிய அவசர நிலை என தெரிவித்துள்ளார். முன்னதாக, தீவிரவாதிகளான குர்திஷ்  போராளிகள் மீது ராணுவ தாக்குதல் தொடங்க இருப்பதாக அண்டை நாடான துருக்கி அறிவித்தது. சிரியாவிலுள்ள குர்திஷ் படைகள் மீது தாக்குதல் நடத்தினால் பொருளாதார பேரழிவு ஏற்படும் என்று துருக்கி அரசுக்கு அமெரிக்க அதிபர்  டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : US ,attack ,Turkey ,Syrian ,Kurdish ,Trump , US attack on Syrian Kurdish forces: US imposes economic sanctions on Turkey
× RELATED அமெரிக்காவில் காந்தி சிலை சேதம்: தூதர் மன்னிப்பு கோரினார்