×

சர்வதேச கைகழுவுதல் தினம் இன்று!...

சர்வதேச கைகழுவுதல் தினம் - அக்டோபர் 15

ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 15-ஆம் நாள் சர்வதேச கைகழுவுதல் தினம் (Global Hand Washing Day) கடைபிடிக்கப்படுகிறது. நோய்களைத் தவிர்த்து உயிரைக் காக்க சோப்பினால் கைகழுவும் ஓர் எளிமையான, மலிவான மற்றும் நல்ல பலனளிக்கும் பழக்கத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய புரிதலையும், விழிப்புணர்வையும் அதிகரிப்பதே இந்த தினத்தின் முக்கிய நோக்கம்.பெரும்பாலான தொற்று கிருமிகள் கைகள் மூலமாகவே பரவுகின்றன.

பணியிடம் மற்றும் சுற்றுப்புறங்களில் இருந்து நாம் எடுத்து வரும் வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகளை அடிக்கடி சரியான முறையில் கைகழுவுவதன் மூலம் அகற்ற முடியும். பெரும்பாலான தொற்று நோய்களை எளிய முறையான கைகழுவுதல் மூலம் தடுக்கலாம். கழிவறையைப் பயன்படுத்திய பின், குப்பையைக் கையாண்ட பின், சாப்பிடும் முன் போன்ற முக்கியமான நேரங்களில் கைகழுவுவதை ஒரு தொடர் பழக்கமாக மாற்ற வேண்டியது மிகவும் அவசியம்.

பல நோய்களும் தொற்றும் பரவாமல் தடுக்க மிகச்சிறந்த ஒரு வழியே கைகழுவுதல். எப்போதெல்லாம் கைகழுவ வேண்டும்?உங்கள் கைகள் அழுக்காக இருக்கும்போது, கழிவறையைப் பயன்படுத்திய பின், உணவைச் சமைக்க, பரிமாற, உண்ணத் தொடங்கும் முன், செல்லப் பிராணிகளையும் பிற விலங்குகளையும் தொட்ட பின், வெளிப்புற வேலைகளுக்குப் பின், நோயாளிகளைச் சந்திக்கும் முன்னும் பின்னும், இருமல், தும்மல், மூக்குப்பிடித்தப் பின், குப்பைக் கூடையைத் தொட்ட பின், காலணிகளைப் பாலிஷ் செய்த பின் பொதுப் போக்குவரத்தில் சென்று வந்த பின், ரூபாய் நோட்டுகளை எண்ணிய பின்னர் இதுபோன்ற எல்லா காரணங்களுக்காகவும் கைகளைக் கழுவுங்கள்.

கைகழுவும் முறை கைகளை நீரால் நனைக்கவும், போதுமான அளவுக்கு சோப்பிடவும், வலது உள்ளங்கையில் இடது உள்ளங்கையை வைத்து விரல்களைப் பின்னவும், விரல்கள் பிணைந்திருக்க உள்ளங்கைகளைத் தேய்க்கவும், அழுத்தி கைகளைத் தேய்த்து, எல்லா பகுதிகளையும் கழுவவும். உள்ளங்கை, மணிக்கட்டு, விரலிடுக்கு, நகத்தைச் சுற்றி நுரையைத் தேய்க்கவும்.

இடது பெருவிரலை வலது உள்ளங்கையால் பற்றி சுழற்றி தேய்க்கவும். இதே போல் மாற்றிச் செய்யவும். வலது கை விரல்களை மடக்கி இடது உள்ளங்கையால் பற்றி முன்னும் பின்னும் சுழற்றியும் பின் மாற்றியும் தேய்க்கவும். கைகளைக் கழுவி, ஒரே தடவை பயன்படுத்தும் சுத்தமான காட்டன் துண்டு கொண்டு துடைத்து, அந்தத் துண்டினைக் கொண்டே குழாயை மூடவும். இப்போது உங்கள் கைகள் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்.

ஆல்கஹால் சுத்திகரிப்பானைக் கொண்டு கைகழுவும் முறைஉள்ளங்கை நிறைய சுத்திகரிப்பானை எடுத்து கைகளின் எல்லா பகுதியிலும் பூச வேண்டும். கைகளை உள்ளங்கையில் தேய்க்க வேண்டும். வலது உள்ளங்கையை இடது புறங்கையின் மேல் வைத்து விரல்களைப் பின்னவும், இதையே மாற்றிச் செய்ய வேண்டும். உள்ளங்கைமேல் உள்ளங்கையை வைத்து விரல்களைப் பின்ன வேண்டும். இப்போது விரல்களின் பின்புறத்தை எதிர் உள்ளங்கையில் வைத்து விரல்களைப் பின்ன வேண்டும்.

இடது பெருவிரலை வலது உள்ளங்கையால் பற்றி சுழற்றி தேய்க்க வேண்டும். பின் இதேபோல் மாற்றிச் செய்ய வேண்டும். வலது கையின் விரல்களை மடக்கி இடது உள்ளங்கையால் பற்றி சுற்றித் தேய்க்க வேண்டும். பின் இதேபோல் மாற்றிச் செய்ய வேண்டும். கைகள் காய்ந்த பின் சுத்தமாக இருக்கும்.

அனைவரின் கவனத்திற்கு...

* நகத்தைக் குட்டையாக வெட்டுங்கள். நீளமாக வைக்க விரும்பினால் அழுக்குகள் சேராமலும் தொற்று பரவாமலும் இருக்கும்படி சுத்தமாக வைக்க வேண்டியது அவசியம்.

* தோல் உலராமல் இருக்க மென்மையான சோப்பைப் பயன்படுத்துங்கள். கையை உலர்த்த துடைப்பதை விடவும் ஒத்தி எடுப்பது நல்லது. ஈரப்பசை அளிக்கும் லோஷனை பயன்படுத்தலாம்.

* தண்ணீரோ, சோப்போ இல்லாதபோது நீரற்ற சோப்பும் கிருமிநாசினியும் சிறந்த மாற்று. அவை தற்போது திரவ வடிவில் சிறிய  பேக்குகளிலும் கிடைக்கின்றன.

* கழிப்பறையைப் பயன்படுத்திய பின்னும், உணவைக் கையாளும் முன்னும் கண்டிப்பாக கைகழுவ வேண்டும்.

* சோப்பில்லாமல் வெறும் நீரால் கைகழுவுவதால் அதிக பலன் கிடைக்காது. இதனால் சரியான முறையில் கைகழுவுவதற்கு சோப்பும் சிறிதளவு
தண்ணீரும் போதுமானது.

* சோப்பால் கைகழுவுதல் என்பது நோய் தொற்றுகளைத் தடுத்து நமது உயிரைக் காப்பாற்ற உதவும் சிறந்த தடுப்புமுறை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

சரியான முறையில் கைகழுவுவதால் நமது நாட்டின், வீட்டின் வரவு செலவில் எவ்வளவு பெரிய சேமிப்பு உண்டாகிறது என்பதை எண்ணிப்பார்த்து, இந்த சர்வதேச கைகழுவுதல் தினத்தில் இப்பழக்கத்தை அனைவரும் கடைபிடிக்கத் தொடங்குவோம்.

தொகுப்பு: க.கதிரவன்


Tags : International Handloom Day Today!
× RELATED பாரதியார் நினைவு தினம் மகாகவி நாள்:...