புதுவை வீராம்பட்டினம்-கடலூர் நல்லவாடு மீனவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்: 600 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

பாகூர்: புதுவை வீராம்பட்டினம் பகுதி மீனவர்களுக்கும், அதை ஒட்டிய தமிழகத்தின் கடலூர் மாவட்டம் நல்லவாடு பகுதி மீனவர்களுக்கும் இடையே சுருக்கு வலை விவகாரம் தொடர்பாக அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது. கடந்த  மாதம் இருதரப்பு மீனவர்களும் நடுக்கடலில் மீன்பிடித்தபோது ஏற்பட்ட மோதல் தொடர்பாக தவளகுப்பம் காவல் நிலையத்தில் சமீபத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது. கடந்த 1ம்தேதி  சினிமாவுக்கு சென்றுவிட்டு நல்லவாடு மீனவர்கள் சிலர்  பைக்கில் கடற்கரையோரமாக வீடு திரும்பியபோது நடராஜ் என்பவரின் படகில் இருந்த ரூ.25 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைக்கு வீராம்பட்டினம் இளைஞர்கள் சிலர் தீ வைத்து விட்டு ஓடியதால் மீண்டும் இரு மீனவ கிராமங்களுக்கு  இடையே மோதல் உருவானது.

புதுச்சேரி மற்றும் கடலூர் போலீசார் எஸ்பிக்கள் தலைமையில் அங்கு குவிக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தியதால் மோதல் தடுக்கப்பட்டது. இதனிடையே நல்லவாடு மீனவர் நடராஜ் அளித்த புகாரின் பேரில் மீன்பிடி வலைக்கு தீவைத்ததாக   வீராம்பட்டினத்தை சேர்ந்த கவி (24), சாமுவேல் (25) ஆகியோர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. இதில் கவியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதுவை மீன்வளத்துறை   அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமையில் இருதரப்பு மீனவ சமுதாய கூட்டம் மீன்வளத்துறை அலுவலகத்தில் நடைபெற்றது. இது தோல்வியில் முடிந்தது. இதையடுத்து இரு மீனவ கிராமங்களிலும் போலீசார் தீவிர ரோந்துப் பணியில்   ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை வீராம்பட்டினம் மற்றும் நல்லவாடு மீனவர்கள் நடுக்கடலில் அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, மீண்டும் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த நல்லவாடு மீனவர்கள்,  வீராம்பட்டினம்  மீனவர்களை தாக்கியுள்ளனர். தகவலறிந்து இருகிராம மீனவர்களும் சுளுக்கி, அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் படகில் சென்றனர். நடுக்கடலில்  நாட்டு வெடிகுண்டுகளை வீசியும், கத்தியால் சரமாரி தாக்கியும்  மோதலில் ஈடுபட்டனர்.  இதில் நல்லவாடு கிராமத்தை சேர்ந்த அய்யப்பன், ரவி, மன்னன், மஞ்சினி ஆகியோரும், வீராம்பட்டினத்தை சேர்ந்த சுரேந்தர் என்பவரும் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து சீனியர் எஸ்பி அகன்ஷா யாதவ்  தலைமையில் எஸ்பிக்கள் மாறன்,  வீர.பாலகிருஷ்ணன், ஜிந்தா கோதண்டராமன், ரங்கநாதன் மேற்பார்வையில் நூற்றுக்கணக்கான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

இரு கிராம மக்களும் கடற்கரையில் குவிந்த நிலையில் பதற்றம் அதிகரித்தது. இதையடுத்து மோதல் நடைபெற்ற பகுதிக்கு விரைந்து சென்று அனைவரையும் கலைந்து செல்லுமாறு போலீசார் எச்சரித்தனர். ஆனால் அவர்கள் மறுத்த நிலையில்   வானத்தை நோக்கி 10 முறை துப்பாக்கி சுட்டதோடு, 3 கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர். இதனால் கூட்டம் சிதறி ஓடியது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் கலவர கும்பல் வீசிய நாட்ட வெடிகுண்டுவீச்சில் சில மீனவர்கள்   காயமடைந்ததாக தெரிகிறது.

இருப்பினும் இருகிராம மீனவர்களுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடிக்கலாம் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே காயமடைந்த மீனவர்கள் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிலர்   தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களின் உறவினர்கள் திரண்டுள்ளதால் மருத்துவமனையிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 600 பேர் மீது 600 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ்  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இரு கிராம மீனவர்களிடையே சமாதான கூட்டம் நடத்தும் வரை மீன்பிடிக்க செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

Related Stories: