மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் சரமாரி குற்றச்சாட்டு: பாஜ அரசிடம் கொள்கை இல்லாததே மந்தநிலைக்கு காரணம்

புதுடெல்லி: ‘‘பாஜ அரசிடம் சரியான கொள்கைகள் ஏதும் இல்லாததே பொருளாதார மந்தநிலைக்கு காரணம்’’ என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பொருளாதார நிபுணருமான பரகல பிரபாகர் கூறி உள்ளார்.

சமீபகாலமாக நாட்டின் பொருளாதாரம் மந்தகதியில் உள்ளது. ஆட்டோமொபைல் உள்ளிட்ட பல்வேறு துறைகள் கடும் வீழ்ச்சி கண்டு வருகின்றன. இதனால், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடுமையாக சரியும் நிலையில் உள்ளது. இதற்கு,  மத்திய அரசின் ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு உள்ளிட்ட தவறான பொருளாதார கொள்கைகள்தான் காரணம் என பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால், பொருளாதார மந்தநிலை நிலவுவதை ஒப்புக் கொள்ளாத மத்திய அரசு,   பொருளாதாரத்தை மீட்க பல சலுகைகளை அறிவித்து வருகிறது.

இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும் ஆந்திர மாநில முன்னாள் தகவல் தொடர்பு ஆலோசகருமான பொருளாதார நிபுணர் பரகல பிரபாகர் (60), ‘பொருளாதாரத்தை வழிநடத்த ஒரு துருவ நட்சத்திரம்’ என்ற  தலைப்பில் பிரபல ஆங்கில நாளிதழில் கட்டுரை ஒன்றை எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: பொருளாதார மந்தநிலை குறித்து மறுப்பு தெரிவிக்கும் மனநிலையிலேயே மத்திய அரசு உள்ளது. ஒவ்வொரு துறையாக அடுத்தடுத்து  கடின சவால்களை எதிர்க்கொண்டு வரும் நிலையில், அவை பொருளாதாரத்தில் என்ன பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை வெளிக்காட்டவில்லை. பொருளாதார சவால்களை எதிர்கொள்ள பாஜ அரசிடம் திட்டங்கள் உள்ளன என்பதை காட்ட  வெகு குறைவான சான்றுகளே உள்ளன.

பொருளாதார நெருக்கடியை கையாள மத்திய அரசிடம் உள்ள வழிமுறைகளையும், அதற்கு ஆதரவாக கருத்துக்களை உருவாக்கவும், பாஜ அரசிடம் விவரிக்க முடியாத தயக்கம் உள்ளது. நேருவின் சோஷலிச கொள்கையை எப்போதும்  எதிர்ப்பதில் பாஜ தெளிவாக இருந்து வருகிறது. ஆனால், முதலாளித்துவம், தடையற்ற சந்தை கட்டமைப்பு போன்ற அதன் சொந்த வாதங்கள் இன்னும் நடைமுறையில் சோதிக்கப்படாமலே உள்ளன. இந்த அரசிடம் சரியான புதிய கொள்கைகள்  இல்லாததே பொருளாதார மந்தநிலைக்கு காரணமாகும். நேருவின் பொருளாதார கொள்கையை விமர்சிப்பது அரசியல் தாக்குதலாகவே உள்ளது என்பதை பாஜவின் தலைமை இன்னும் புரிந்து கொள்ளாமலே உள்ளது. பாஜவுக்கென பலமான  பொருளாதார கொள்கை எதுவும் இல்லை. இதை அறிந்ததால்தான் 2வது முறையாக ஆட்சியை பிடிக்கும் முயற்சியின்போது கூட அரசியல் நிலவரம், தேசியவாதம், நாட்டின் பாதுகாப்பு போன்ற தளத்தை மட்டுமே தேர்வு செய்து பிரசாரத்தில்  முன்வைத்தது.

பி.வி.நரசிம்மராவ், மன்மோகன் சிங் ஆகியோரின் பொருளாதார வளர்ச்சிக்கான கொள்கைகள் இன்றைய காலக்கட்டத்திலும் சவால் விட முடியாதவைகளாகவே உள்ளன. இதுவரை மத்தியில் ஆட்சி அமைத்த அனைத்து கட்சிகளும், ஆதரவு  அளித்த கட்சிகளும், வெளியில் இருந்து ஆதரவளித்தவர்களும் கூட அவர்களின் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளனர். எனவே, நரசிம்மராவ்-மன்மோகன் சிங்கின் கொள்கையை பாஜ அரசு முழுமையாக பின்பற்றுவதன் மூலம் பொருளாதார  நெருக்கடியிலிருந்து மீள முடியும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

* பி.வி.நரசிம்மராவ், மன்மோகன் சிங்  ஆகியோரின் பொருளாதார வளர்ச்சிக்கான கொள்கைகள் இன்றைய காலக்கட்டத்திலும்  சவால் விட முடியாதவைகளாகவே உள்ளன. இதுவரை மத்தியில் ஆட்சி அமைத்த அனைத்து  கட்சிகளும், ஆதரவு  அளித்த கட்சிகளும், வெளியில் இருந்து ஆதரவளித்தவர்களும்  கூட அவர்களின் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

Related Stories: