காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற சோனியா காந்தி குறித்து அரியானா முதல்வர் சர்ச்சை பேச்சு

சோனிபட்: ‘‘செத்து போன எலியை கண்டுபிடிக்க மலையை குடைந்த கதையாக, 3 மாதமாக தேடி, கடைசியில் சோனியாவையே தலைவராக்கினார்கள்’’ என அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் பேசியது சர்ச்சையாகி உள்ளது.

அரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் 21ம் தேதி நடக்க உள்ளது. இதில், ஆளும் பாஜவை எதிர்த்து காங்கிரஸ் கட்சி ஜனநாயக ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அங்கு, கடைசிக்கட்ட பிரசாரம் சூடுபிடித்துள்ள  நிலையில், மாநில முதல்வரான மனோகர் லால் கட்டார் சோனிபட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது: மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததும், ராகுல் காந்தி கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகினார். காந்தி  குடும்பத்தை சாராத ஒருவர் கட்சி தலைவராக வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

பரம்பரை அதிகாரத்தில் இருந்து தலைவர் பதவிக்கு விடுதலை கொடுப்பது நல்ல விஷயம் என்பதால் அவர்கள் எதிர்க்கட்சியாக இருந்தாலும், ராகுலின் முடிவை வரவேற்றோம்.மூன்று மாதமாக நாடு முழுவதும் தலைவர் பதவிக்கான நபரை  தேடினார்கள். அதன் பின் யார் தலைவரானார் என்பது உங்களுக்கே தெரியும். எலியை கண்டுபிடிக்க, அதுவும் செத்து போன எலியை கண்டுபிடிக்க மலையை குடைந்த கதையாக, 3 மாதம் தேடி சோனியாவை தேர்ந்தெடுத்துள்ளார்கள். இதுதான்  அவர்களின் நிலை. இந்த குடும்பக் கட்சி நடத்தும் கூத்தை நீங்களே அறிவீர்கள். இப்போது குடும்பத்துக்குள்ளே சண்டை வந்து விட்டது. ஒருபுறம் ராகுலும், மறுபுறம் அவரது அம்மாவும் மோதிக் கொள்கிறார்கள். இவ்வாறு அவர் பேசி உள்ளார்.  ஏற்கனவே கடந்த வாரம் பொதுக்கூட்டத்தில் பேசிய கட்டார், தீவிரவாதிகள் மீது அனுதாபம் காட்டும் கட்சி காங்கிரஸ் என்றும், தீவிரவாதிகளுக்காக கண்ணீர் சிந்தியவர் சோனியா என்றும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது குறிப்பிடத்தக்கது.

மன்னிப்பு கேட்க காங். வலியுறுத்தல்

கட்டாரின் பேச்சுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மகளிர் அணி தலைவி சுஷ்மிதா தேவ் அளித்த பேட்டியில், ‘‘பாஜ முதல்வரின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.  அவரது பேச்சு  மலிவானது மற்றும் ஆட்சேபனைக்குரியது மட்டுமல்ல, இது பாஜ.வின் பெண்கள் விரோத தன்மையையும் காட்டுகிறது. அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். நாட்டில் வேலையில்லா திண்டாட்டம், பொருளாதார வீழ்ச்சி போன்ற  உண்மையான பிரச்னைகளை மூடிமறைக்க இதுபோன்று தரம் தாழ்ந்து பேசுகின்றனர்’’ என்றார்.

Related Stories: