ஐ.ஜி. முருகன் மீதான பாலியல் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்க மனு

புதுடெல்லி: காவல்துறை ஐ.ஜி. முருகன் மீதான பாலியல் தொடர்பான வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றியமைக்க தேவையில்லை எனும் மனுவை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை பெண்  எஸ்பியை அந்த துறையின் உயர் அதிகாரியான ஐஜி முருகன் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததாக புகார் கூறப்பட்டது. விவகாரத்தில் நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் அரசை வலியுறுத்தினர். விரிவான  விசாரணை நட்த்த ஏ.டி.ஜி.பி சீமா அகர்வால் தலைமையில் விசாகா குழு அமைக்கப்பட்டது. இரு தரப்பு கருத்துக்களையும் கேட்ட குழு வழக்கை சிபிசிஐடிக்கு பரிந்துரை செய்தது. சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர்.

விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது மட்டுமில்லாமல், வழக்கை கண்கானிக்க மத்திய உள்துறைக்கும் அறிவுறுத்தி இருந்தது.

இந்நிலையில், வழக்கை தெலங்கானா போலீசார் விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவிற்கு எதிராக ஐஜி முருகன் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச  நீதிமன்றம், “உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு நீதிமன்றம் தடை விதிக்கிறது. அதேபோல், இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டதாக கூறும் பெண் அதிகாரி மற்றும் தமிழக அரசு விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்பப்படுகிறது’’ என கடந்த  மாதம் 24ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி இந்து மல்கோத்ரா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் ஒரு விளக்கம் கொடுக்கப்பட்டது.

அதில், “ஐ.ஜி. முருகன் தொடர்பான வழக்கை தெலங்கானா உட்பட வேறு மாநிலத்தில் விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. இதில் வேண்டுமானால் உச்ச நீதிமன்றமே ஒரு சிறப்பு குழுவை உருவாக்கியோ அல்லது ஓய்வு நீதிபதி ஒருவரை  நியமித்தோ தமிழகத்திலேயே விசாரணை மேற்கொள்ளலாம் எனக்கூறி அது தொடர்பான விளக்கம் கொண்ட மனுவை நீதிபதி முன்னிலையில் தாக்கல் செய்தனர். இதையடுத்து நீதிபதி,”இதுதொடர்பான வழக்கில் தமிழக அரசு தாக்கல்  செய்துள்ள மனுவிற்கு பாதிக்கப்பட்ட பெண் எஸ்பி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்து வழக்கை அடுத்த 2 வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Related Stories: