×

சேலம் சிறையில் பழக்கம் ஏற்பட்டது கும்பல் தலைவன் முருகனுடன் சேர்ந்து வங்கியில் கொள்ளை அடித்தோம்: கூட்டாளி பரபரப்பு வாக்குமூலம்

திருச்சி: திருச்சி நகைக்கடை கொள்ளை கும்பலின் தலைவன் முருகனுடன் சேலம் சிறையில் இருந்தபோது நெருக்கமானது, அவருடன் சேர்ந்து பஞ்சாப் நேசனல் வங்கியில் கொள்ளையடித்தோம் என்று கைதான மதுரையை சேர்ந்த கூட்டாளி  கணேசன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கடந்த 2ம் தேதி அதிகாலை ரூ.13 கோடி மதிப்புள்ள 28 கிலோ தங்கம், வைரம் மற்றும் பிளாட்டின நகைகள்  கொள்ளையடிக்கப்பட்டன. இந்த கொள்ளையில் தலைவன் முருகன் பெங்களூரு கோர்ட்டில் சரண் அடைந்தான். இந்நிலையில் கொள்ளை தொடர்பாக போலீசார் கைது செய்த முருகனின் நெருங்கிய கூட்டாளி கணேசன் பரபரப்பு வாக்குமூலம்  அளித்துள்ளான். அப்போது  கூறியிருப்பதாவது:

எனது நண்பர் பாண்டியராஜன் மதுரையில் உள்ள ஒரு நகைக்கடை அதிபரிடம் டிரைவராக வேலை செய்தார். அப்போது நான், பாண்டியராஜ், செல்வம் ஆகியோர் 2014ல் நகைக்கடை அதிபர் வீட்டில் இரண்டே கால் கிலோ நகைகளை  கொள்ளையடித்து தப்பினோம். பின்னர் 3 பேரும் கைதாகி சேலம் சிறையில் அடைக்கப்பட்டோம். அப்போது முருகனும் ஒரு வழக்கில் கைதாகி சேலம் சிறையில் இருந்தார்.
அப்போது எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. அந்த வழக்கில் முருகனுக்கு பெயில் கிடைத்து வெளியே சென்றதும் என்னையும் அவர்தான் பெயிலில் வெளியே கொண்டு வந்தார். இதனால் எங்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டது. என்னுடன் அடிக்கடி  தொடர்பு கொள்வார்.

திருச்சி நெ.1 டோல்கேட்டில் பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளையடிக்க என்னை அழைத்தார். நானும் அதில் சேர்ந்து தான் கொள்ளை அடித்தோம். பின்னர் திருச்சி நகைக்கடையில் கொள்ளை அடித்ததும் அன்று இரவே முருகன் எங்களுக்கு  எடை மிஷின் மூலம் எடைபோட்டு நகைகளை பிரித்து கொடுத்து விட்டார். எனது பங்காக 6 கிலோ கிடைத்தது. அதில் 5 கிலோவை ஒரு இடத்தில் புதைத்து வைத்து விட்டு ஒரு கிலோவை மளிகை கடைக்காரர் மகேந்திரனிடம் கொடுத்து  உருக்கி தர சொன்னேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார். திருச்சி பஞ்சாப்  நேஷனல் வங்கி கொள்ளை தொடர்பாக திருச்சி மாவட்ட எஸ்பி ஜியாவுல்ஹக் நிருபர்களிடம் கூறுகையில், வெல்டிங் மூலம் கொள்ளையில் ஈடுபடும் தமிழ்நாட்டை  சேர்ந்த நபர்கள், வெளிமாநில நபர்கள் என 2 வகையாக பட்டியல் தயாரிக்கப்பட்டது.

வெல்டிங் தொழிலில் கைதேர்ந்தவர் யார்,யார் என நீண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில் யார், யார் தலைமறைவாக இருக்கிறார்கள் என விசாரித்தபோது திருவெறும்பூரில் வேலையில் இருந்த ராதாகிருஷ்ணன் மாயமானது தெரியவந்தது.
தஞ்சையை சேர்ந்த அவர் எங்கே இருக்கிறார் என விசாரித்தபோது மதுரையை சேர்ந்தவரும், கொள்ளை வழக்கில் தொடர்புடையவருமான கணேசனுக்கு உறவினர் என தெரியவந்தது. எனவே இருவரையும் தேடி வந்தபோது தான் கணேசன்  திருச்சி நகைக்கடை கொள்ளையிலும் ஈடுபட்டு சிக்கினார். இந்த கொள்ளையில் முருகன், கணேசன், ராதாகிருஷ்ணன் உள்பட 4 பேர் ஈடுபட்டு உள்ளனர். இவர்கள் இப்போது போலீசிடம் சிக்கி உள்ளனர். பஞ்சாப் நேஷனல் வங்கியில், 470 பவுன்  நகைகள், ரூ.19 லட்சம் ரொக்கம் கொள்ளை போனது. வங்கி கொள்ளையில் ஊழியர்களுக்கு தொடர்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

வங்கி கொள்ளைக்கு பயன்படுத்திய கட்டிங் மெஷின் பறிமுதல்
வங்கி கொள்ளைக்காக மதுரையில் வாங்கப்பட்ட காஸ் கட்டிங் மெஷின், கையுறை, ஒயர், கோட் செட் 2, டூல்ஸ் செட் மற்றும் சிலிண்டர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

முக்கிய குற்றவாளி சுரேஷுக்கு 7 நாள் போலீஸ் காவல்
திருச்சி பிரபல நகை கடையில் நடந்த கொள்ளையில் முக்கிய குற்றவாளியான சுரேஷ் திருவண்ணாமலை செங்கம் கோர்ட்டில் சரண் அடைந்தார். திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட அவரது நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து,  பலத்த பாதுகாப்புடன் அவரை போலீசார் ஜே.எம்.2 கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தினர். அப்போது சுரேசை 15 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி, கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோசலைராமன் மனு செய்தார்.
இதைகேட்ட சுரேஷ், தனக்கு சுவாச கோளாறு உள்ளது. என்னை போலீசார் துன்புறுத்துவார்கள். இதனால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. எனவே போலீஸ் காவலுக்கு அனுப்ப வேண்டாம் என மாஜிஸ்திரேட் முன் கண்ணீர் விட்டு கதறினர்.  இதைகேட்ட மாஜிஸ்திரேட், சுரேசை 7 நாள் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மாலை 5 மணி முதல் 5.30 மணி வரை சுரேசை அவரது வக்கீல் சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும்.  

உடல்நிலை பாதிக்கப்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் அவரை பாதுகாப்புடன் அழைத்து சென்று ரகசிய இடத்தில் வைத்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.  இதில், முருகன் மற்றும் சுரேசுக்கு வேறு யாருடன் தொடர்பு உள்ளது. கொள்ளையடித்த மீதி நகைகள் எங்கே பதுக்கியுள்ளனர். வேறு எங்கெல்லாம் கொள்ளையில் ஈடுபட்டனர். பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகை, பணத்தை  எங்கு வைத்துள்ளனர் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.



Tags : Murugan ,bank ,jail ,Salem ,bank robbery , Salem prison, gang leader, Murugan
× RELATED பள்ளிகள் விடுமுறையையொட்டி...