×

பைனான்ஸ் அதிபர், மனைவியை கொன்று புதைத்த அக்கா உட்பட 2 பேர் கைது: சடலங்கள் தோண்டி எடுத்து பரிசோதனை

வெள்ளகோவில்: வெள்ளகோவில் அருகே திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற பைனான்ஸ் அதிபரையும், அவரது மனைவியையும் கொன்று புதைத்த சொந்த அக்கா உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம் ஈசநத்தம்  அருகே தாசநாயக்கனூரை சேர்ந்தவர் செல்வராஜ் (50). பைனான்ஸ் அதிபர். இவரது மனைவி வசந்தாமணி (42). இவர்களது மகன் பாஸ்கருக்கு (27) நவம்பர் 1ம் தேதி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக உறவினர்களுக்கு திருமண  அழைப்பிதழை தம்பதியர் இருவரும் காரில் சென்று கொடுத்து வந்தனர். கடந்த 10ம் தேதி திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உத்தாண்டகுமாரவலசில் உள்ள செல்வராஜின் உடன் பிறந்த அக்கா கண்ணம்மாளுக்கு (54) திருமண  அழைப்பிதழ் கொடுக்க சென்றவர்கள் திரும்பவில்லை. புகாரின்படி வெள்ளகோவில் போலீசார், கண்ணம்மாள் வீட்டிற்கு சென்று விசாரித்தனர்.

அப்போது அவர் சொத்து தகராறில் தம்பி செல்வராஜையும், அவரது மனைவியையும் மருமகன் நாகேந்திரனுடன் சேர்ந்து,  உணவில் விஷம் கொடுத்தும், தலையில் அம்மி கல்லை போட்டும் கொலை செய்து, சடலத்தை  வீட்டின் அருகிலேயே  குழி தோண்டி புதைத்ததாக கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் அவரையும், ஈரோட்டில் இருந்த அவரது மருமகன் நாகேந்திரனையும் கைது செய்தனர். கண்ணம்மாளின் வீட்டின் அருகே புதைக்கப்பட்டு இருந்த செல்வராஜ், அவரது மனைவி  வசந்தாமணி சடலங்கள் நேற்று தோண்டி எடுக்கப்பட்டன. வெள்ளகோவில் தாசில்தார் புனிதவதி, டிஎஸ்பி செல்வம் முன்னிலையில், கோவை அரசு டாக்டர் ஜெய்சிங்  தலைமையிலான 16 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் அங்கேயே பிரேத  பரிசோதனை செய்தனர்.

சடலங்கள் புதைக்கப்பட்ட குழியில் கத்தி, கம்பி, ரத்தக்கறை படிந்த துணி, பக்கெட் உள்ளிட்டவை இருந்தன. பிரேத பரிசோதனையில் வசந்தாமணி கத்தியில் அறுக்கப்பட்டும், செல்வராஜ் தலையில் அம்மி கல்லை போட்டும் கொலை  செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக கண்ணம்மாளின் மகள் பூங்கொடி, நாகேந்திரனின் நண்பர் இளங்கோ ஆகியோரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

₹4 லட்சத்துக்காக நடந்த கொடூரம்
கைதான கண்ணம்மாளிடம் போலீசார்  நடத்திய விசாரணையில் கொலைக்கான காரணம் தெரியவந்தது. செல்வராஜின் தந்தை காளியப்ப கவுண்டருக்கு சொந்தமான 4  ஏக்கர் நிலம் இருந்துள்ளது. அதை செல்வராஜின் மகன் பாஸ்கர் பெயரில்   காளியப்பகவுண்டர் உயில் எழுதி வைத்துள்ளார். அந்த  நிலத்தை ரூ.43 லட்சத்திற்கு செல்வராஜ் விற்பனை செய்துள்ளார். அதில் பங்கு  வேண்டும் என கண்ணம்மாள் கேட்டுள்ளார். ஆனால் செல்வராஜ் பங்கு கொடுக்க  மறுத்து விட்டார்.  எனவே ரூ.5 லட்சமாவது தரும்படி கண்ணம்மாள்  கேட்டுள்ளார். ஆனால் ரூ.1 லட்சத்தை மட்டும் செல்வராஜ்  கொடுத்ததாக  கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கண்ணம்மாள், பாஸ்கரின் திருமண  அழைப்பிதழ் கொடுக்க வந்த  செல்வராஜையும், அவரது மனைவியையும் ெகாலை செய்துள்ளார்.

Tags : Chancellor , Accounting Chancellor, Wife, Murder
× RELATED வவ்வால் மூலம் கொரோனா வைரஸ் பரவாது:...