ஆந்திரா வங்கி லாக்கரை உடைத்து 12 கிலோ நகைகள், 2.66 லட்சம் திருட்டு: மர்ம நபர்கள் கைவரிசை

சித்தூர்: சித்தூர் அருகே ஆந்திரா வங்கி லாக்கரை உடைத்து 12 கிலோ நகைகள், 2.66 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், யாதமரி மண்டலம், மோர்தானாபல்லி கிராமத்தில் ஆந்திரா வங்கி  செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் மேலாளராக புருஷோத்தம், கணக்காளராக நாராயணசாமி ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 12ம் தேதி புருஷோத்தமும், நாராயணசாமியும் வழக்கம்போல் வங்கியை பூட்டிவிட்டு  சென்றனர்.இந்நிலையில் நேற்று வழக்கம்போல் வங்கியை திறக்க வந்தனர். தொடர்ந்து வங்கி பூட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கிருந்த கம்ப்யூட்டர்கள் சுக்கு நூறாக உடைந்து கிடந்தது. மேலும் கம்ப்யூட்டர் மற்றும்  சிசிடிவி கேமராவின் ஹார்டு டிஸ்க்குகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

மேலும் வங்கி லாக்கரில் இருந்த 12 கிலோ தங்க நகைகள், ₹2.66 லட்சம் போன்றவை திருட்டு போனது தெரியவந்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் மேலாளரும், கணக்காளரும் யாதமரி காவல் நிலையத்திற்கு சென்று எஸ்ஐ புருஷோத்தமிடம்  புகார் செய்தனர். இதையடுத்து டிஎஸ்பி ஈஸ்வர், இன்ஸ்பெக்டர் லட்சுமிகாந்த், ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது வங்கியின் பூட்டு உடைக்கப்படாமலும், எந்த பகுதியிலும் துளையிடாமலும் இந்த  திருட்டு சம்பவம் நடந்திருப்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து மேலாளர் மற்றும் கணக்காளரிடம் போலீசார் சந்தேகத்தின்பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: