×

இந்திய பேராசிரியர், மனைவிக்கு பொருளாதார நோபல் பரிசு : 3 பேர் கூட்டாக பெறுகின்றனர்

ஸ்டாக்ஹோம்: இந்திய அமெரிக்க பேராசிரியர் அபிஜித் பானர்ஜி, அவரது மனைவி எஸ்தர் டுப்லோ, மற்றொரு பொருளாதார நிபுணர் மைக்கேல் கிரீமர் ஆகியோருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிக உயர்ந்த விருதாக கருதப்படும் நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு, சுவீடனின் ஸ்டாக்ஹோமில் நேற்று அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப மையம்(எம்ஐடி)யில் பணியாற்றும் பொருளாதாரத்துறை பேராசிரியர் அபிஜித் பானர்ஜி(58). இவர் மும்பையில் கடந்த 1961ம் ஆண்டு பிறந்தார். கொல்கத்தா பல்கலைக்கழகம், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் பயின்றுள்ளார். இவர் பிரெஞ்சு-அமெரிக்க பெண் எஸ்தர் டுப்லோ என்பவரை மணந்தார். இவரும் எம்ஐடியில் பேராசிரியராக பணியாற்றுகிறார். கடந்த 2003ம் ஆண்டில் இவர் தனது மனைவியுடன் சேர்ந்த அப்துல் லத்தீப் ஜமீல் ஏழ்மை ஒழிப்பு மையத்தை தொடங்கி அதன் இயக்குனராக செயல்பட்டு வந்தார்.

ஏழை பொருளாதாரம் என்பது உட்பட 4 புத்தகங்களை இவர் எழுதியுள்ளார். அதில் மொராக்கோவில் சாப்பாட்டுக்கே வழியில்லாத ஒருவர் ஏன் டி.வி வாங்குகிறார்? ஏழ்மையான பகுதியில் வசிக்கும் குழந்தைகளுக்கு கல்வி கிடைப்பது ஏன் கடினமாக உள்ளது? அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் ஒருவரை ஏழ்மையாக்குகிறதா? என பல கேள்விகளுக்கு அபிஜித் பானர்ஜி பதில் அளித்துள்ளார். உலக ஏழ்மைக்கு எதிராக போராடும் வழி குறித்து டுப்லோவும் இந்த புத்தகத்தில் எழுதியுள்ளார். உலக ஏழ்மையை ஒழிக்கும் அணுகுமுறைக்காக இவருக்கும், இவரது மனைவி எஸ்தர் டுப்லோ மற்றொரு பொருளாதார நிபுணர் மைக்கேல் கிரீமர் ஆகியோருக்கு கூட்டாக பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

‘நியாய்’ வடிவமைக்க காங்கிரசுக்கு உதவியவர்

பணமதிப்பிழப்பு நடவடிக்கை மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என அபிஜித் பானர்ஜி கருத்து கூறியிருந்தார். இந்திய பொருளாதாரம் பற்றி தவறான புள்ளி விவரங்கள் மத்திய அரசு நிறுவனங்கள் மூலம் வெளியிடப்படுவதாகவும், இது ஆபத்தானது என பிரதமர் மோடிக்கு 108 பொருளாதார நிபுணர்கள் கடிதம் எழுதியிருந்தனர். அதில் அபிஜித் பானர்ஜியும் ஒருவர். காங்கிரஸ் கட்சி மக்களவை தேர்தலில் ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் நிதி வழங்கும் நியாய் திட்டத்தை அறிவித்தது. இதை வகுத்து கொடுக்க அபிஜித் பானர்ஜி உதவியுள்ளார். இந்திய பொருளாதாரம் பற்றி அமெரிக்காவில் இருந்து பேட்டியளித்துள்ள அபிஜித் பானர்ஜி, ‘‘இந்திய பொருளாதரத்தின் நிலை மிகமோசமான நிலையில் உள்ளது. பொருளாதாரம் விரைவில் சீரடையும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது’’ என கூறியுள்ளார்.

தலைவர்கள் வாழ்த்து

அபிஜித் பானர்ஜிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் ‘‘ஏழ்மை ஒழிப்புக்கு மிக முக்கிய பங்காற்றியவர்’’ என்று கூறியுள்ளார். அபிஜித் பானர்ஜிக்கு நோபல் பரிசு கிடைத்த விஷயம் நேற்று மதியமே வெளியான நிலையில், பிரதமரின் வாழ்த்து செய்தி வழக்கமாக உடனடியாக இல்லாமல், மாலையில்தான் வெளியானது. அபிஜித்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் மற்றும் பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Tags : Indian ,Indian Nobel Peace Prize Winner , Indian Nobel Peace Prize Winner: 3
× RELATED இந்திய பங்குச் சந்தைகள் காலை முதலே சரிவுடன் தொடக்கம்