×

தென் ஆப்ரிக்காவுடன் மகளிர் கிரிக்கெட் ஹாட்ரிக் வெற்றியுடன் ஒயிட்வாஷ் செய்தது இந்தியா

வதோதரா: தென் ஆப்ரிக்க மகளிர் கிரிக்கெட் அணியுடனான 3வது ஒருநாள் போட்டியில், 6 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற இந்தியா 3-0 என தொடரை முழுமையாக கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. இந்தியா - தென் ஆப்ரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகளிடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது. முதல் 2 போட்டிகளிலும் அபாரமாக வென்ற இந்தியா 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றிய நிலையில், 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வதோதராவில் நேற்று நடைபெற்றது. ரிலையன்ஸ் ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த இந்திய அணி 45.5 ஓவரில் 146 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. ஹர்மான்பிரீத் கவுர் அதிகபட்சமாக 38 ரன் (76 பந்து, 5 பவுண்டரி) எடுத்தார். ஷிகா பாண்டே 35 ரன் (40 பந்து, 6 பவுண்டரி), பூனம் ராவுத் 15, கேப்டன் மித்தாலி 11, மான்ஸி ஜோஷி 12 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர்.

அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி 48 ஓவரில் 140 ரன் எடுத்து அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது. மரிஸன்னே காப் 29, கேப்டன் சுனே லுவஸ் 24, லாரா வுல்வார்ட் 23 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். இந்திய பந்துவீச்சில் ஏக்தா பிஷ்ட் 3, தீப்தி ஷர்மா, ராஜேஸ்வரி தலா 2, மான்ஸி, ஹர்மான்பிரீத், ஜெமிமா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஹாட்ரிக் வெற்றியுடன் 3-0 என தொடரை கைப்பற்றிய இந்திய அணி ஒயிட் வாஷ் செய்து அசத்தியது. இந்த போட்டியின் சிறந்த வீராங்கனையாக ஏக்தா பிஷ்ட் (இந்தியா), தொடரின் சிறந்த வீராங்கனையாக மரிஸன்னே காப் (தென். ஆப்.) தேர்வு செய்யப்பட்டனர்.


Tags : women's cricket hat-trick ,India ,South Africa , women's cricket, hat-trick , South Africa
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...