சென்னை மற்றும் புறநகரில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்றவர் கைது

தண்டையார்பேட்டை: ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு விற்று வந்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர். சென்னை வண்ணாரப்பேட்டை சி.பி சாலையில் நேற்று முன்தினம் இரவு வண்ணாரப்பேட்டை இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை மடக்கி, டிரைவரிடம் விசாரித்தபோது அவர், முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்து உள்ளார். இதனால், சந்தேகமடைந்த போலீசார், அந்த ஆட்டோவை சோதனை செய்தபோது, அதில் 3 கிலோ கஞ்சா கடத்தி செல்வது தெரிந்தது. இதையடுத்து, ஆட்டோ டிரைவரை காவல் நிலையம் கொண்டு சென்று, விசாரித்தனர்.

அதில், சென்னை செங்குன்றம் பகுதியை சேர்ந்த கோபி (50) என்பதும், இவர் ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து மொத்தமாக கஞ்சா வாங்கி வந்து, சிறு சிறு பொட்டலங்களாக பிரித்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்கள், ஆட்டோ டிரைவர்கள், கூலி தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, ஆட்டோவுடன் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் கோபியை கைது செய்து, விசாரித்து வருகின்றனர். கடந்த மாதம் இதே பகுதியில் போலீசார் சோதனை நடத்தியபோது ஆட்டோ, பைக்கில் கஞ்சா கடத்தி வந்த 4 பேர் கைது செய்யப்பட்டு, 30 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: