காட்டில் விடப்பட்டுள்ள 3 மாத 'அம்முகுட்டி'யானையை, யானைக் கூட்டத்துடன் சேர்க்கும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சென்னை : காட்டில் விடப்பட்டுள்ள 3 மாத குட்டி யானையை, யானைக் கூட்டத்துடன் சேர்க்கும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அம்முகுட்டி என்ற குட்டியானையை வனப்பகுதிக்குள் விடுவதற்கு தடை கோரி வழக்கில் தமிழக வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

யார் அந்த அம்முகுட்டி குட்டியானை ?

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், பவானிசாகர் அருகே, தாயை இழந்து, காட்டுக்குள் இருந்து வழி தவறி வந்த, மூன்று மாத குட்டி பெண் யானையை, வனத் துறையினர் மீட்டனர். காராச்சிக்கொரை வன கால்நடை மருத்துவமனையில், அம்மு என, பெயரிடப்பட்டு, அந்த குட்டி யானை பராமரிக்கப்பட்டு வந்தது.

அந்த குட்டி யானையை, வனத்துக்குள் விட்டால் சிறுத்தை, புலி போன்ற விலங்குகளால், பாதிப்பு ஏற்படும் என்பதால், வண்டலுார் அல்லது முதுமலை பகுதிகளில் வைத்து பராமரிக்கலாம் என, யோசனை தெரிவிக்கப்பட்டது. ஆனால், வனத் துறையினர், குட்டி யானையை, லாரியில் ஏற்றி சென்று, காட்டிற்குள் விட்டுள்ளனர். இதையறிந்த வனஉயிரின ஆர்வலர்கள், கடும் அதிருப்தியடைந்தனர்.

நீதிபதிகள் உத்தரவு

இந்நிலையில் அம்முகுட்டி என்ற குட்டியானையை வனப்பகுதிக்குள் விடுவதற்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் இன்றைய விசாரணையின் போது, காட்டில் விடப்பட்ட குட்டியானையை கண்காணித்து வருகிறோம், அதை மற்ற யானைகள் சேர்த்துக் கொள்ளாவிட்டால், வனத்துறை கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளும் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்ட நீதிபதி, மூன்று மாத குட்டியானை தனக்கான உணவை தேட முடியாது என்பதால் அதற்கு எப்படி பால் கிடைக்கும்? என்றும் பிற விலங்குகளால் ஆபத்து ஏற்படும் என்பதால், ஒருவேளை யானைக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் அதற்கு அரசு பொறுப்பேற்குமா? என்றும் வனத்துறைக்கு கேள்வி எழுப்பியது. இதையடுத்து காட்டில் விடப்பட்டுள்ள 3 மாத குட்டி யானையை, யானைக் கூட்டத்துடன் சேர்க்கும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகளில் உத்தரவிட்டனர்.

Related Stories: