சிரியாவின் வடக்குப் பகுதியில் குர்து படையினர் மீது துருக்கி 5-வது நாளாகத் தாக்குதல்: 4 லட்சம் மக்கள் வெளியேற்றம்

சிரியா: சிரியாவின் வடக்குப் பகுதியில் குர்து படையினர் மீது துருக்கி 5-வது நாளாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போதுவரை சுமார் 4 லட்சம் மக்கள் தங்கள் இருப்பிடங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். சிரிய - துருக்கி எல்லைப்புறத்தில் உள்ள குர்து தீவிரவாதிகளை முற்றிலுமாக அழிப்பதற்காக இந்த ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் எல்லைப் பகுதி பாதுகாப்பாக இருக்குமென்றும் லட்சகணக்கான சிரிய அகதிகள் இதன் மூலம் நாடு திரும்பலாம் என்றும் துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.  இதனைத் தொடர்ந்து சிரியாவில் குர்து படையினரின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள வடக்குப் பகுதியில் கொடூரமான தாக்குதலை துருக்கி நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதல் தற்போது ஐந்தாவது நாளாகத் தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக ஏராளமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், குர்து பத்திரிகையாளர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் சிரிய கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. துருக்கியின் தாக்குதல் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.  ஐஎஸ் தீவிரவாதிகளை அழிப்பதற்காக குர்து தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளித்த அமெரிக்கா, துருக்கியின் தாக்குதல் காரணமாக சிரியாவிலிருந்த தங்கள் படைகளை வாபஸ் பெற்றது. இதன் காரணமாக அமெரிக்காவால் தாங்கள் முற்றிலுமாக ஏமாற்றப்பட்டுள்ளதாக குர்து படைகள் கருதுகின்றன. இதனைத் தொடர்ந்து துருக்கியின் தாக்குதலைத் தடுப்பதற்காக சிரிய அரசுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள குர்து படைகள் முடிவெடுத்தன. இதற்கான அறிக்கையை குர்து படைகள் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டன. இதனைத் தொடர்ந்து சிரிய அரசு தனது படைகளை எல்லைக்கு அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குர்து படைகள் மீதான துருக்கியின் ராணுவத் தாக்குதலை ஈரான், இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

Related Stories: