ஆவடி அருகே காட்டூரில் கொலை செய்யப்பட்டவர் திருவல்லிக்கேணி வாலிபர்: தப்பிய 3 பேரை பிடிக்க தனிப்படை

ஆவடி: ஆவடி அருகே காட்டூரில் கொலை செய்யப்பட்ட வாலிபர் சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.ஆவடி அடுத்த காட்டூர், ஆர்ச் அந்தோணி நகரில் உள்ள காலி மைதானத்துக்கு கடந்த 10ம் தேதி மாலை, 2 பைக்கில் 4 பேர் வந்தனர். அவர்களில் 3 பேர், அவர்களுடன் வந்த மற்றொரு வாலிபருடன் தகராறில் ஈடுபட்டனர். இருதரப்பினருக்கும்  இடையே வாக்குவாதம் முற்றியதில், மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக அவரை வெட்டி கொலை செய்துவிட்டு 3 பேரும் தப்பிச்சென்றனர்.இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயகிருஷ்ணன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இறந்த நபருக்கு சுமார் 25 வயது இருக்கும். அவரது இடது கையில் எஸ்.எம். என்ற எழுத்தும் மார்பில் மீனா என ஆங்கிலத்தில் பச்சை குத்தப்பட்டும் இருந்தது. அவரது கை, கால், மார்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டு காய  தழும்புகள் இருந்தது. இவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என போலீசார் விசாரித்து வந்தனர். மேலும் உடனடியாக அவரை கண்டுபிடிக்க முடியாததால் அவரது புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தனர்.

 இந்நிலையில், கொல்லப்பட்ட வாலிபர், சென்னை திருவல்லிக்கேணி, அனுமந்தபுரம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (26) என தெரியவந்தது. இவரது சொந்த ஊர் மதுரை. இவர் மீது சென்னை மற்றும் மதுரையில் குற்ற வழக்குகள் நிலுவையில்  உள்ளன. இவருக்கு சரோஜினி என்ற மனைவியும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இதனிடையே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த சடலத்தை பார்த்து தனது கணவர் தான் என சரோஜினி உறுதிப்படுத்தினார். மேலும் பிரகாஷை ஆவடிக்கு பைக்கில் அழைத்து வந்து கொலை செய்த நபர்கள் யார், பிரகாஷுக்கும் அவர்களுக்கும் இடையே என்ன விரோதம் இருந்தது என போலீசார் தனிப்படை அமைத்த குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.  இன்ஸ்பெக்டர் ஜெயகிருஷ்ணன் கூறுகையில், ‘பிரகாஷை கொன்றவர்கள் அடையாளம் தெரியவந்துள்ளது. விரைவில் போலீசாரிடம் கொலையாளிகள் சிக்குவார்கள்’ என்றனர்.

Related Stories: