திருவொற்றியூரில் மெட்ரோ ரயில் பணி நடைபெறும் இடங்களில் பழுதடைந்த சாலைகள்: வாகன ஓட்டிகள் அவதி

திருவெற்றியூர்:    திருவொற்றியூரில் மெட்ரோ ரயில் பணி நடைபெறும் இடங்களில் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரை மெட்ரோ ரயில் விரிவாக்க பணி பல கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது. இதற்காக திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் ராட்சத தூண்கள் மீது ரயில் பாதை  அமைக்கபடுகிறது. இந்நிலையில் இந்த மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் பல இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளதால் மாநகர பேருந்து, கார் போன்ற வாகனங்கள் சிரமத்துடன் செல்லும் நிலை உள்ளது.   மேலும், இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் சாலையில் சிதறிக்கிடக்கும் கருங்கற்களில் சறுக்கி கீழே விழுந்து காயமடைகின்றனர். குறிப்பாக எல்லையம்மன் கோயில் தெரு, திருவொற்றியூர் மார்க்கெட் பகுதி போன்ற பல இடங்களில் மிக  மோசமாக சாலை பழுது அடைந்துள்ளது.

எனவே, பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால் ஒரு சில இடங்கள் மட்டுமே சாலைகள் சீரமைக்கப்பட்டு, மற்ற இடங்களில் சாலைகள்  போடாமல் அப்படியே கிடப்பில் விட்டுவிட்டனர். இதனால், போக்குவரத்துக்கு இடையூறு மற்றும் விபத்து அதிகரித்து வருகிறது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில்,  ‘‘மெட்ரோ ரயில் நடைபெறும் இடங்களில் சாலை அமைக்க வேண்டும் என்பது விதிமுறை.  இதற்காக நிதியும் ஒதுக்கப்படுகிறது. ஆனால் அதிகாரிகள் ஒரு சில இடங்களில் மட்டும் சாலையை  போட்டுவிட்டு மற்ற இடங்களில் சாலைகள் போடாமல் முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.  மேலும் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் போதிய பாதுகாப்பு இல்லாமல் நடைபெற்று வருகிறது. இதனால் உயரத்தில் இருந்து இரும்பு கம்பி போன்றவைகள் கீழே சாலையில் செல்லும் பொதுமக்கள் மீது விழுந்து விபத்து ஏற்படும் அபாயம்  உள்ளது. எனவே பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும். பாதுகாப்பான முறையில் பணிகளை செய்ய வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: