×

வேலையில் இருந்து நீக்கியதால் மாடியில் இருந்து குதித்து மாநகராட்சி ஊழியர் சாவு

புழல்: வேலையில் இருந்து நீக்கப்பட்டதால் விரக்தியடைந்த மாநகராட்சி ஊழியர், மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். புழல், புனித அந்தோணியார் நகர் பிரதான சாலையை சேர்ந்தவர் ஜானி தென்னரசு (34). இவர், சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், 25வது வார்டு கதிர்வேடு பகுதியில் சுகாதாரத்துறை மலேரியா பிரிவில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி  வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கு முன், ஒப்பந்த நிறுவனம் இவரை வேலையில் இருந்து நிறுத்தி விட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ஜானி தென்னரசு, வீட்டில் யாரிடமும் சரிவர பேசாமல், மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.  மேலும், திடீரென வேலையில் இருந்து நீக்கப்பட்டதால் வருவாய் இன்றியும், வேறு வேலை கிடைக்காமலும் தவித்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினர் தூங்கிய நிலையில், தனது வீட்டின் மாடிக்கு சென்ற ஜானி தென்னரசு, அங்கிருந்து திடீரென கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை எழுந்த இவரது மனைவி, வீட்டில் கணவன் இல்லாததை கண்டு தேடினார். அப்போது, வீட்டின் அருகே ரத்த வெள்ளத்தில் கணவன் சடலமாக கிடப்பதை கண்டு, கதறி அழுதார். தகவலறிந்து புழல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, ஜானி தென்னரசின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுபற்றி வழக்குப்பதிவு செய்து  விசாரித்து வருகின்றனர்.

Tags : floor ,floor death corporation employee , Since ,fired, Jumping , floor, Death ,corporation employee
× RELATED பணியின் போது தவறி விழுந்த மேஸ்திரி பலி