×

பாரிமுனையில் ஆவணம் இல்லாமல் வைத்திருந்த 44 கிலோ வெள்ளி கட்டிகள் பறிமுதல்: ஒருவர் கைது

சென்னை: பாரிமுனை விடுதியில் ஆவணம் இன்றி வைத்திருந்த 44 கிலோ வெள்ளி கட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து சென்னை பாரிமுனை, பூக்கடை, சவுகார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு வரும் வியாபாரிகள், இங்குள்ள சிலரிடம் இருந்து உரிய ஆவணம் இல்லாமல் தங்கம், வெள்ளி வாங்கி செல்வதாக,  சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அவரது உத்தரவின் பேரில், பூக்கடை போலீஸ் துணை ஆணையர் ராஜேந்திரன் மேற்பார்வையில், தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு மேற்கண்ட பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். சவுகார்பேட்டை சமுத்திரம் முதலி தெருவில்  உள்ள தனியார் விடுதியில் சோதனையிட்டபோது, அங்குள்ள ஒரு அறையில், சேலத்தை சேர்ந்த பழனிவேல் (42)  என்பவர், உரிய ஆவணமின்றி 44 கிலோ வெள்ளி கட்டிகள் வைத்திருப்பது தெரிந்தது.

 அவற்றை பறிமுதல் செய்து, பழனிவேல் என்பவரை கைது செய்தனர். பின்னர், வருமான வரித்துறை அதிகாரிகளிடம், பழனிவேலை ஒப்படைத்தனர். வருமானவரித்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன், இதே பகுதியில் ஆவணம் இன்றி தங்க கட்டிகள் கடத்த முயன்ற கேரளாவை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Kept ,document , barium, 44kg silver lumps ,one arrested
× RELATED லஞ்சம் வாங்கிய ஆய்வாளர்கள் கைது