காந்தி பிறந்த மண்ணில் இப்படியும் பரிதாபம் காந்தி எப்படி தற்கொலை செய்தார்? பள்ளி தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி

அகமதாபாத்: குஜராத்தில் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்த தேர்வில், ‘‘மகாத்மா காந்தியடிகள் எப்படி தற்கொலை செய்து கொண்டார்?’’ என்று கேட்கப்பட்டிருந்த கேள்வியால் மாணவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.குஜராத்தின் காந்திநகரில் அரசு உதவி பெறும் சுபலம் ஷாலா விகாஸ் சங்குல் என்ற அமைப்பின் கீழ் இயங்கும் பள்ளிகளில் உள்மதிப்பீட்டு தேர்வு நேற்று முன்தினம் நடந்தது. இதில் 9ம் வகுப்பு மாணவர்களின் கேள்வித்தாளில், ‘‘காந்தியடிகள்  எப்படி தற்கொலை செய்துக் கொண்டார்?  என்று கேட்கப்பட்டிருந்தது. இதனால் மாணவர்கள் கடும் குழப்பமும் அதிர்ச்சியும் அடைந்தனர். இதுதவிர 12ம் வகுப்பு மாணவர்களின் கேள்வித்தாளில், ‘‘உங்கள் பகுதியில் மது விற்பனை அதிகரித்து  வருவது பற்றியும், சட்டவிரோதமாக மது உற்பத்தியாளர்களால் உருவாக்கப்பட்ட தொல்லைகள் குறித்தும் மாவட்ட காவல்துறைத் தலைவருக்கு புகார் அனுப்புதல் என ஒரு கேள்வி இடம்பெற்றிருந்தது. குஜராத்தில் முழு மதுவிலக்கு அமலில்  உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவல் கல்வி அதிகாரிகளும், மாநில உயர் அதிகாரிகளுக்கும் தெரிந்தவுடன் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து காந்தி நகரின் மாவட்ட கல்வி அதிகாரி பாரத் கூறுகையில், ‘‘சம்பந்தப்பட்ட பள்ளியின் கேள்வித்தாள் மிக  ஆட்சேபகரமானவை. இது அவர்களாகவே தயாரித்த கேள்வித்தாள். இதற்கும் கல்வித்துறைக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதில் எவ்வாறு இந்த கேள்விகள் எல்லாம் தயாரிக்கப்பட்டன  என்பது குறித்து தெரியவரும். தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

Related Stories:

>