பாலிவுட் சினிமா பட வசூலுடன் ஒப்பிட்டு பொருளாதாரம் பற்றி கூறிய கருத்தை வாபஸ் பெற்றார் ரவிசங்கர் பிரசாத்

புதுடெல்லி: நாட்டின் பொருளாதார நிலையை பாலிவுட் சினிமா வசூலுடன் ஒப்பிட்டு தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதால், அதை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வாபஸ் பெற்றுள்ளார். நாட்டில் வேலைவாய்ப்பின்மை சதவீதம் மிக அதிகமாக உள்ளதாக என்எஸ்எஸ்ஓ என்ற அமைப்பும், இந்தியாவில் பொருளாதார மந்தநிலை இன்னும் அதிகமாக இருக்கும் என சர்வதேச நிதியமும் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தன. இதை  விமர்சிக்கும் வகையில் மும்பையில் நேற்று முன்தினம் பேட்டியளித்த மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், ‘கடந்த 2ம் தேதி விடுமுறை தினத்தில் 3 பாலிவுட் படங்கள் ரூ.120 கோடி வசூல் செய்துள்ளன. நாட்டின் பொருளாதாரம்  வலுவான நிலையில் இல்லை என்றால், எப்படி இந்த 3 படங்களும் ஒரே நாளில் ரூ.120 கோடி வசூல் செய்திருக்கும்?’ என கூறினார்.. இதற்கு பல தரப்பில் கண்டனங்கள் எழுந்தது.

இதையடுத்து, நேற்று அவர் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: 3 பாலிவுட் படங்கள் ஒரே நாளில் ரூ.120 கோடி வசூல் செய்ததாக நான் தெரிவித்த கருத்து உண்மை. சினிமாவின் தலைநகர் மும்பையில் நான் இருந்ததால் இந்த கருத்தை  தெரிவித்தேன். லட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு அளித்து, வரி செலுத்துவதில் முக்கிய பங்காற்றும் சினிமா தொழில் குறித்து நாம் பெருமை அடைகிறோம். பொருளாதாரத்தை வலுப்படுத்த மத்திய அரசு எடுத்துள்ள பல நடவடிக்கைகள்  குறித்தும் நான் விளக்கினேன். எனது முழுப்பேட்டியும் சமூக இணைய தளத்தில் உள்ளது. ஆனால், எனது கருத்தின் ஒரு பகுதி மட்டும் எடுத்து திரித்து கூறப்பட்டுள்ளது. நான் உணர்வுபூர்வமான நபராக இருப்பதால், அந்த கருத்தை வாபஸ்  பெற்றுக் கொள்கிறேன்.

Related Stories: