×

தெலங்கானா போக்குவரத்து ஊழியர்கள் 9வது நாள் போராட்டத்தில் ஒருவர் தீக்குளித்து தற்கொலை: போராட்டம் தீவிரமடைந்ததால் போலீசார் குவிப்பு

திருமலை: கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பஸ் ஊழியர்கள் தெலங்கானா மாநிலம் முழுவதும்  தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு  ஏற்பட்டுள்ளது.தெலங்கானா மாநில அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, போக்குவரத்து கழகத்தை அரசுடன் இணைக்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய பஸ் வாங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல  கோரிக்கைகளை வலியுறுத்தி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பஸ் ஊழியர்கள் தொடர்ந்து நேற்று 10வது நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில், ஊழியர்கள் சங்கங்களுடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் தெலங்கானாவில் பெரும்பாலான பகுதிகளில் பஸ்கள் ஓடவில்லை. வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டு கடந்த 5ம் தேதி  மாலைக்குள் பஸ் ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும். இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் சந்திரசேகர ராவ் எச்சரித்தார்.

இதையடுத்து, 1200 ஊழியர்கள் மட்டும் பணிக்கு திரும்பினர். மேலும், வேலைக்கு திரும்பாத 48 ஆயிரம் பேர் அதிரடியாக நீக்கம் செய்து முதல்வர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டார். இந்நிலையில் 9வது நாளாக நேற்று முன்தினமும் நடந்த  போராட்டத்தின் போது கம்மம் மாவட்டத்தை சேர்ந்த போக்குவரத்து டிரைவர் நிவாஸ் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அவரை உடனிருந்தவர்கள் மீட்டு ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று நிவாஸ் பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் உயிரிழப்புக்கு அரசு தான் முழுபொறுப்பேற்க வேண்டும் என்று தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் நிவாஸ் உயிரிழந்ததால் போராட்டம்  மேலும் தீவிரமடைந்துள்ளது. இதனால் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், நேற்று முன்தினம் மாலை ஐதராபாத்தில் உள்ள பிரகதி பவனியில் முதல்வர் சந்திரசேகர ராவ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது அவர் பேசியதாவது:சட்டத்திற்குப் புறம்பாக போக்குவரத்து தொழிலாளர்கள் செய்யும் வேலை நிறுத்தத்திற்கு எக்காரணத்தை கொண்டும் அரசு பணியாது. தொழிற்சங்கத்தினரின் இந்த நடவடிக்கையால் 48 ஆயிரம் ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர். இதற்கு  எதிர்க்கட்சியினர் கண் மூடித்தனமாக ஆதரவு தெரிவிக்கின்றனர். மத்தியில் ஆட்சியில் இருக்கக்கூடிய பாஜ மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், அவர்கள் ஆளும் மாநிலத்தில் எதற்காக போக்குவரத்து கழகத்தை அரசுடன் இணைக்கவில்லை. மத்திய அரசு பல ரயில் நிலையங்களை தனியார்  மயமாக்கியதோடு, செகந்திரபாத் ரயில் நிலையத்தையும் தனியார் மயமாக்கியுள்ளது. பல ரயில் சேவையையும் தனியாருக்கு தாரைவார்த்தது. அவர்கள் செய்வது நியாயம் என்று கூறும் பாஜ, மாநிலத்தில் செய்தால் மட்டும் தவறு என்று கூறுவது ஏன்? 3 நாளில் போக்குவரத்து பழைய நிலைக்கு திரும்பும் என்றார்.

Tags : Telangana Transport Workers Set ,Transport Staff ,Intensifies Fighting ,Suicide , Telangana,Transport Staff, Suicide, fighting intensifies
× RELATED நடத்துனர் இல்லா பேருந்துகளை...