இன்று இறுதி கட்டத்துக்குள் நுழைகிறது அயோத்தி வழக்கு: 17ம் தேதி தீர்ப்பு?

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் நீண்ட விசாரணையை சந்தித்து வரும் அயோத்தி வழக்கு, இன்று இறுதி கட்டத்துக்குள் நுழைகிறது. வரும் 17ம் தேதி விசாரணை முடிக்கப்பட்டு, அடுத்த மாதம் 17ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது. அயோத்தி வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி முதல் நாள் தோறும் விசாரித்து வருகிறது.இந்த அமர்வில் நீதிபதிகள் பாப்டே, சந்திராசூட், அசோக் பூஷன், நசீர் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.  இந்த வழக்கின் விசாரணையை வரும் 17ம் தேதியுடன் முடித்துக் கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியிருந்தது. தசரா விடுமுறைக்குப்பின், அயோத்தி வழக்கு இன்று இறுதி கட்டத்துக்குள் நுழைகிறது. உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெறும் 38வது நாள் விசாரணை இன்று நடக்கிறது.

முஸ்லிம் தரப்பினர் இன்று தங்கள் விவாதங்களை நிறைவு செய்கின்றனர். அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்து அமைப்பினர் தங்களின் மறுப்புகளை சுருக்கமாக தெரிவிக்க உள்ளனர். வரும் 17ம் தேதியுடன் அயோத்தி வழக்கின் இறுதி விசாரணை முடிகிறது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அடுத்த மாதம் 17ம் தேதி ஓய்வு பெறுகிறார். அன்றைய தினம் அயோத்தி வழக்கின் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: