×

பைக், செல்போன் திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பு: சிஎஸ்ஆர் வழங்காமல் போலீசார் அலைக்கழிப்பு... மக்கள் பரபரப்பு குற்றச்சாட்டு

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மக்கள் அதிகளவில் வந்து செல்லும் பஸ் நிலையங்கள், மருத்துவமனைகள் ஆகிய இடங்களை குறி வைத்து பைக் திருட்டு கும்பல் கைவரிசை காட்டி வருகிறது. அதேபோல், செல்போன் திருட்டு சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பைக் மற்றும் செல்போன் திருட்டு குறித்து புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்காமல் போலீசார் அலட்சியம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் புகார்தாரர்களுக்கு சிஎஸ்ஆர் கூட வழங்காமல் அலைக்கழிப்பதாக புகார எழுந்துள்ளது.

இதேபோல், அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரியில் கடந்த 10 நாட்களில் 20க்கும் மேற்பட்ட பைக்குகள் திருட்டு போனதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்தவர்களுக்கு இதுவரை சிஎஸ்ஆர் நகல் வழங்கவில்லையாம். கடந்த 10 நாட்களுக்கு முன்பு காட்பாடி அடுத்த கண்டிப்பேடு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வேலைக்கு செல்வதற்காக, காட்பாடி ஓடைபிள்ளையார் கோயில் பஸ் நிறுத்தத்துக்கு வந்தார். அப்போது, அவரது செல்போனை வாலிபர் ஒருவர் பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டாராம். இதுகுறித்து இளம்பெண் காட்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து இதுவரை சிஎஸ்ஆர் நகல் வழங்காமல் அலைக்கழித்து வருகிறார்களாம்.

காட்பாடி உழவர் சந்தை உட்பட மாவட்டத்தின் பெரும்பாலன பகுதியில் நடக்கும் பைக் திருட்டு சம்பவங்கள் மற்றும் வேலூர் கிரீன் சர்க்கிள், வேலூர்- ஆற்காடு சாலை ஆகிய பகுதிகளில் நடக்கும் செல்போன் பறிப்பு சம்பவங்களில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்காமல் போலீசார் அலட்சியம் காட்டி வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதற்கிடையில், வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பைக் பார்க்கிங் பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்தும்படி மருத்துவமனை நிர்வாகத்திடம் பலமுறை அறிவுறுத்தியும் அலட்சியமாக இருப்பதாக போலீசார் தரப்பில் குற்றம்சாட்டி உள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘வேலூர் அரசு மருத்துவமனைக்கு ஏழைகள்தான் பெரும்பாலும் வந்து செல்கிறோம். பார்க்கிங்கில் நிறுத்தப்படும் பைக்குகளை மர்மநபர்கள் திருடி சென்றுவிடுகின்றனர். மேலும் பல இடங்களில் செல்போன் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை. இந்நிலையில் திருட்டு பைக்குகளை கொண்டு சென்று குற்றச்சம்பவங்களால் ஈடுபட்டால், பைக்கின் உரிமையாளர்கள் பாதிக்கப்படுவார்கள்’ என்று வேதனை தெரிவிக்கின்றனர்.

ஐஎம்இஐ மாற்றுவதில் விதிமீறல்
செல்போன்கள் திருட்டு போய்விட்டால், ஐஎம்இஐ எண்ணை வைத்து சைபர் கிரைம் போலீசார் கண்காணிக்கின்றனர். இதன்மூலம் வேறு சிம்கார்டை பயன்படுத்தினாலும் செல்போன் எங்கிருக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியும். ஆனால், மொபைல் சர்வீஸ் கடைகளில் சிலர் விதிமுறைகளை பின்பற்றாமல் ஐஎம்இஐ எண்ணை மாற்றி கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, ஐஎம்இஐ எண்ணை மாற்றி கொடுப்பதில் புதிய விதிமுறைகளை வகுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

சைபர் கிரைம் பிரிவு எச்சரிக்கை
சைபர் கிரைம் பிரிவு போலீசார் கூறுகையில், ‘குறைந்த விலைக்கு கிடைக்கிறது என்பதற்காக செல்போன்களை அடையாளம் தெரியாதவர்களிடம் வாங்கக்கூடாது. அந்த செல்போன் திருட்டு போனதாக இருந்தால், அதை வாங்கியவர்கள் பொறுப்பாகி விடுவார்கள்.  அதேபோல், கீழே கிடைக்கும் செல்போன்களை பயன்படுத்தாமல் போலீசில் ஒப்படைக்க வேண்டும்’ என்றனர்.

Tags : CSR , Increase in bike, cellphone, theft incidents
× RELATED மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ் அரசு பள்ளி மாணவர்களுக்கு ₹52 லட்சம் காசோலை