×

வண்டல்-தேவகோட்டை நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து வரும் கருவேல மரங்கள்: வாகன ஓட்டிகள் அவதி

இளையான்குடி: வண்டல்-தேவகோட்டை நெடுஞ்சாலையை கருவேலமரங்கள் ஆக்கிரமித்துள்ளதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் வண்டல் விலக்கு சாலையிலிருந்து, அளவிடங்கான், கீழவிசவனூர், வடக்கு விசவனூர், புக்குளம் வழியாக தேவகோட்டைக்கு நெடுஞ்சாலை செல்கிறது. இந்த நெடுஞ்சாலை வழியாக இளையான்குடி, பரமக்குடி, ஆனாந்தூர், ஆர்எஸ்.மங்கலம், தேவகோட்டை, காரைக்குடி, மற்றும் ராமநாதபுரம், ராமேஸ்வரம் ஆகிய ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும் பள்ளி வாகனங்களும் சென்று வருகின்றன.

 வண்டல் விலக்கிலிருந்து 6 கிலோ மீட்டர் தூரம் வரை இளையான்குடி நெடுஞ்சலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த நெடுஞ்சாலையின் இருபுறமும் கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இதனால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடும்போது, சாலையோரத்தில் இறங்கும் வாகனங்கள் பஞ்சர் ஆகிறது. பஸ் படிக்கட்டில் பயணம் செய்யும் பயணிகளை கருவேலமர முள்கள் குத்தி கிழித்து ரத்தக்காயம் ஏற்படுத்துகின்றன. எனவே சாலையோரம் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த வில்லியம் கூறுகையில், ‘நெடுஞசாலைத்துறையால் தொடர்ந்து இந்த சாலை புறக்கணிக்கப்படுகிறது. சாலையோரத்தில் வளர்ந்துள்ள கருவேல மரத்தை அகற்றுவதே இல்லை. அதிகாரிகள் நேரில் வந்து பார்ப்பதே இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர். சாலையோரத்தில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை வேருடன் அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : motorists ,highway ,Vandal-Devakottai ,Vandal-Devakottai Highway of Occupation , Sediment-Devakottai Highway, Karuwala Trees
× RELATED கலவை- வாழைப்பந்தல் நெடுஞ்சாலையில் மரங்களை மர்ம நபர்கள் தீ வைத்து எரிப்பு