×

முதல்வர் செல்லும் சாலையில் சுற்றித்திரிந்த மர்மநபரை பிடித்து போலீசார் விசாரணை: ரகசிய குறியீட்டுடன் 100 ரூபாய் நோட்டு பறிமுதல்

திண்டிவனம்: திண்டிவனத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் சாலையில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த நபரை பிடித்து திண்டிவனம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அவரிடம் இருந்து ரகசிய குறியீடு எழுதிய 100 ரூபாய் நோட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டி இடைத்தேர்தலையொட்டி பிரசாரம் செய்வதற்காக நேற்று மாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி விக்கிரவாண்டி வருகை தந்தார்.
தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு சென்னைக்கு திரும்பும் வழியில் அமைச்சர் சி.வி சண்முகத்தின் தங்கை மகன் மறைவு குறித்து துக்கம் விசாரிப்பதற்காக திண்டிவனம் மொட்டையன் தெருவிலுள்ள அமைச்சர் வீட்டுக்கு நேற்று இரவு வந்தார். அப்போது முதல்வர் வரும் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் ஹோட்டல் முன்பு சந்தேகத்திற்கு இடமான ஒருவர் நீண்ட நேரமாக சுற்றித்திரிந்து கொண்டிருந்ததை போலீசார் கண்காணித்தனர்.

அவரை பிடித்து விசாரித்ததில் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால், திண்டிவனம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.  அப்பொழுது அவருடைய பேண்ட் பாக்கெட்டில் வெள்ளைத்தாளில் நூறு ரூபாய் நோட்டு ஒட்டப்பட்டு ரகசிய எண்கள் எழுதப்பட்டு இருந்தது தெரியவந்தது. மேலும் அவரை சோதனை செய்தபோது செல்போன்கள் ஏதுமின்றி இரண்டு சிம் கார்டுகளையும் வைத்திருந்தார்.  சந்தேகமடைந்த போலீசார் அந்த நபரிடம் தீவிர விசாரணை நடத்தினார். விசாரணையில் திருச்சி வ.உ.சி. தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜமாணிக்கம் (30) என்பது தெரியவந்தது. மேலும் இரவு அவரிடம் விசாரணை முடிந்த நிலையில் மீண்டும் இன்று காலை காவல் நிலையத்திற்கு வரும்படி உத்தரவிட்டனர். முதல்வர் வரும் சாலையில் மர்ம நபர் பிடிபட்ட சம்பவம் திண்டிவனத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Myrmanabar ,road ,CM , Investigation of CM, Murmanapar, police
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...