வெப்பச்சலனம் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: நாமக்கல், சேலம், கரூர், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. ஈரோடு மாவட்டம் ஈரோடு, பெருந்துறை, பவானி, சென்னிமலை, கொடுமுடி, காஞ்சிகோயில், திங்களூர், விஜயமங்கலம் உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்றிரவு பலத்த காற்றுடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான காவேரி நகர், எம்ஜிஆர் நகர், கோட்டைமேடு, படை வீடு உள்ளிட்ட பகுதிகளில் திடீரென சுமார் 2 மணி நேரம் கனமழை கொட்டித் தீர்த்தது. விவசாயிகள் தற்போது நாற்று நடவு செய்ய நிலங்களை சேறு அடித்து இருந்த நிலையில் இந்த மழை பெய்திருப்பது மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இடி மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதற்கிடையில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் மின்னல் தாக்கி விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தன்னுடைய நிலத்தில் வேலை செய்து விட்டு வீடு திரும்புகையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Related Stories:

>