×

நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 விழுக்காடாக குறையும்: உலக வங்கி கணிப்பு

வாஷிங்டன்: நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 விழுக்காடாக  குறையும் என்று உலக வங்கி கணித்துள்ளது. இதன் காரணமாக வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு தயாராகி வருகிறது. ஐஎம்எஃப் எனப்படும் சர்வதேச பண நிதியத்துடனான ஆண்டுக் கூட்டத்தை முன்னிட்டு, நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதில், 2017 - 2018 நிதி ஆண்டில் 7.2 விழுக்காடாக இருந்த இந்திய பொருளாதார வளர்ச்சி, 2018 - 19 நிதி ஆண்டில் 6.9 விழுக்காடாக குறைந்து விட்டதாகக் குறிப்பிட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டான 2019 - 2020-ல் இது 6 விழுக்காடாகச் சரியும் என்று உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. சென்ற நிதி ஆண்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.1 விழுக்காடாக அதிகரித்து இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் நுகர்வு மந்தமாக இருந்ததாகவும், தொழில் மற்றும் சேவைகள் வழங்கல் துறையின் வளர்ச்சி வேகம் குறைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வரிச்சலுகைகள், கடன் வழங்கல் அதிகரிப்பு போன்ற நடவடிக்கைகளால் 2021ஆம் ஆண்டில், இந்தியப் பொருளாதார வளர்ச்சி 6.9 விழுக்காட்டை அடையும் என்றும், 2022ஆம் ஆண்டில் 7.2 விழுக்காடாக உயரும் என்றும் உலக வங்கி கணித்துள்ளது.

இதனிடையே மத்திய நிதி அமைச்சராக உள்ள நிர்மலா சீத்தாராமன், பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தும் வகையில் ஏற்கெனவே ஐந்து கட்டமாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த நிலையில், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் புதிய நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு மத்திய அரசு தயாராகி வருகிறது. இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம், மற்றும் மத்திய நிதி அமைச்சகம் இடையே தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஊக்கத் தொகுப்புகள் குறித்து இதர அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசு அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த முறை, பொருட்களை வாங்குவதற்கு மக்களை தூண்டும் வகையிலும், தேவையை அதிகரிக்கச் செய்யும் வகையிலும் அறிவிப்புகளை வெளியிடுவது பற்றி ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. வருமான வரியைக் குறைப்பது, வீடு மற்றும் வாகனங்களுக்கான இ.எம்.ஐ.யைக் குறைக்க வங்கிகளை அறிவுறுத்துவது, போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நுகர்வை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான, அகவிலைப்படி உயர்த்தப்பட்டதாகவும், நிதியைப் பொறுத்து மேலும் சில அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : India , India's , economic growth , current fiscal, forecast , 6%
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!