தெற்கு சீனாவின் குவாங்சி சுவாங் தன்னாட்சி பகுதியில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 5.2 ஆக பதிவு

பெய்ஜிங்: தெற்கு சீனாவின் குவாங்சி சுவாங் தன்னாட்சி பகுதியில் நேற்று இரவு 10.55 மணிக்கு திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம், யுலின் நகரத்தில் சுமார் 10 கி.மீ ஆழத்தில் பதிவாகியிருப்பதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. மேலும் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சீனாவின் தென்மேற்கு பகுதியில் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் 11 பேர் உயிரிழ்ந்தனர். மேலும் 122 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கமானது சுமார் 40 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்திருந்ததாக தெரிவித்திருந்தனர். அந்த நிலநடுக்கத்தில் பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்து சேதமடைந்தன. 2008 -ம் ஆண்டு மே மாதம் சிச்சுவான் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 70 ஆயிரம் பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: