×

ஆசிர்வதிப்பதாக கூறி நூதன வழிப்பறி திருநங்கை வேடத்தில் பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது: பலரிடம் பிக்பாக்கெட் அடித்து உல்லாச வாழ்க்கை

கோவை: கோவையில் திருநங்கை வேடத்தில் பணம் பறித்த 2 திருடர்களை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் பிச்சம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியம். இவரது மகன் வினோத்குமார் (24). கோவை பீளமேட்டில் உள்ள பாலிடெக்னிக்கில் டிப்ளமோ படித்து முடித்த இவர் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார். சில நாட்களுக்கு முன் இவரது ஒரிஜினல் மாற்று சான்று காணாமல் போனது. கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து டூப்ளிகேட் மாற்று சான்று கேட்டு விண்ணப்பித்திருந்தார். நேற்று முன்தினம் இவர் மாற்று சான்று பெற பீளமேட்டில் உள்ள கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். பீளமேட்டில் பஸ் ஸ்டாப்பில் இறங்கி கல்லூரி நோக்கி தனது நண்பர் ஒருவருடன் சென்றார். அப்போது எதிரே திருநங்கைகள் தோற்றத்தில் 2 பேர் வந்தனர். வினோத்குமாரின் முன் நின்ற அவர்கள், ஒரு ரூபாய் காசை எடுத்து தலையை சுற்றி ஆசிர்வாதம் செய்து கொடுத்தனர்.
இந்த காசை பாக்கெட்டில் எப்போதும் வைத்திருக்கவேண்டும். அப்போதுதான் அதிர்ஷ்டம் கிடைக்கும் எனக்கூறினர். காசை வாங்கிக்கொண்ட வினோத்குமார், தனது பர்சை திறந்து 10 ரூபாய் நோட்டு எடுத்து கொடுத்தார். உடனே அவர்கள் பர்சை பறித்தனர்.

வினோத்குமார் பர்சை கேட்டபோது தர மறுத்தனர். பின்னர் அவர்கள், ‘‘ஐயோ காப்பாத்துங்க... எங்ககிட்ட தப்பா நடந்துக்கிறான்... கைய புடுச்சு இழுக்கிறான்...’’ என கூச்சலிட்டனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த வினோத்குமார், ‘‘நான் எந்த தப்பும் செய்யவில்லை, என்னோட பர்சை அவர்கள் பறித்துவிட்டார்கள்’’ எனக் கூறினார். இது தொடர்பாக பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். அப்போது திருநங்கைகள் தோற்றத்தில் இருந்தவர்களிடம் பர்ஸ் இருப்பதும், அந்த பர்சில் வினோத்குமாரின் போட்டோ, லைசென்ஸ், ஏடிஎம் கார்டு மற்றும் 5 ஆயிரம் ரூபாய் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த 2 பேரிடமும் போலீசார் விசாரித்தனர். அப்போது, கவுண்டம்பாளையம் டி.வி.எஸ் நகர் ரோட்டை சேர்ந்த மணிகண்டன் (36) மற்றும் மணி (32) என்பதும், இருவரும் தலையில் பெண்கள் போன்று சவுரி வைத்து, சேலை அணிந்து திருநங்கைகள் வேடமிட்டு சுற்றியதும் தெரியவந்தது.இவர்கள் திருநங்கைகள்போல் மேக்கப் போட்டு வேடம் அணிந்து விதவிதமாக போட்டோ எடுத்து வைத்திருந்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து 2 பேரையும் கைது செய்தனர். இவர்கள் பீளமேட்டில் மேலும் 2 மாணவர்களிடம் பல ஆயிரம் ரூபாய் பறித்ததும், பலரிடம் பிக்பாக்கெட், வழிப்பறியில் ஈடுபட்டு, கிடைத்த பணத்தில் உல்லாசமாக சுற்றி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags : persons ,Nathdwara , 2 persons,arrested ,allegedly , Nathdwara
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...