தென் ஆப்ரிக்கா 275 ஆல் அவுட் இந்திய அணி வலுவான முன்னிலை

புனே: இந்திய அணியுடனான 2வது டெஸ்டில், தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 275 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 601 ரன் என்ற ஸ்கோருடன் (156.3 ஓவர்) முதல் இன்னிங்சை முடித்துக் கொள்வதாக அறிவித்தது. அகர்வால் 108, புஜாரா 58, ரகானே 59, ஜடேஜா 91 ரன் விளாசி ஆட்டமிழந்தனர். கேப்டன் கோஹ்லி 254 ரன்னுடன் (336 பந்து, 33 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்கா, 2ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன் எடுத்திருந்தது (15 ஓவர்). டி புருயின் 20 ரன், நோர்ட்ஜே 2 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். நோர்ட்ஜே 3 ரன்னில் வெளியேற, டி புருயின் 30 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

கேப்டன் டு பிளெஸ்ஸி - டி காக் ஜோடி 6வது விக்கெட்டுக்கு 75 ரன் சேர்த்தது. டி காக் 31 ரன் எடுத்து அஷ்வின் சுழலில் கிளீன் போல்டானார். அடுத்து வந்த முத்துசாமி 7 ரன்னில் வெளியேறினார். கடுமையாகப் போராடி அரை சதம் அடித்த டு பிளெஸ்ஸி 64 ரன் எடுத்து (117 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்) அஷ்வின் பந்துவீச்சில் ரகானே வசம் பிடிபட்டார். பிலேண்டர் - கேஷவ் மகராஜ் ஜோடி 9வது விக்கெட்டுக்கு இந்திய பந்துவீச்சாளர்களின் பொறுமையை சோதித்தது.

இருவரும் இணைந்து 109 ரன் சேர்த்தனர். மகராஜ் 72 ரன் (132 பந்து, 12 பவுண்டரி), ரபாடா 2 ரன் எடுத்து அஷ்வின் சுழலில் விக்கெட்டை பறிகொடுக்க, தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 275 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (105.4 ஓவர்). பிலேண்டர் 44 ரன்னுடன் (192 பந்து, 6 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் அஷ்வின் 4, உமேஷ் 3, ஷமி 2, ஜடேஜா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்தியா 326 ரன் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருக்க, இன்று 4வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

Related Stories: