ஒரே குடும்பத்தில் 6 பேரை கொன்ற ஜோளி 2வது கணவரையும் கொன்று 3வது திருமணம் செய்ய திட்டம்: விசாரணையில் ‘திடுக்’ தகவல் அம்பலம்

திருவனந்தபுரம்: கேரளாவில்  6 பேரை கொன்ற ஜோளி தனது 2வது கணவரையும் கொன்றுவிட்டு 3வதாக ஒருவரை  திருமணம் செய்ய திட்டமிட்டிருந்த தகவல் வெளியாகியுள்ளது. கேரள  மாநிலம் கோழிக்கோடு அருகே கூடத்தாயி பகுதியை சேர்ந்தவர் ராய்தாமஸ் மனைவி  ஜோளி. கடந்த 2002 முதல் 2016க்கு உள்பட்ட காலத்தில் இவரது கணவர் ராய்தாமஸ்,  அவரது தந்தை, தாய் உள்பட 6 பேர் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்தனர்.  இது தொடர்பாக விசாரணை நடத்திய ேபாலீசார் ஜோளி, உறவினர் மேத்யூ மற்றும்  நகைக்கடை ஊழியர் பிரஜிகுமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். 3 பேரையும் 6 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க தாமரச்சேரி நீதிமன்றம் அனுமதி அளித்தது. கொலை நடந்த இடங்களுக்கு 3 பேரையும் போலீசார் அழைத்து சென்று விசரணை நடத்தினர்.

அனைவருக்கும்  சயனைடை உணவில் கலந்து கொடுத்தபோது தான் மிகவும் கவனமாக இருந்தேன். சயனைடை பயன்படுத்தும்போது கையில் காயம் இருந்தால் அதன் மூலம் உடலுக்குள் செல்ல வாய்ப்பு உள்ளது.  எனவே கையில் காயங்கள் இல்லை என்பதை உறுதி செய்த பிறகு நகத்தால் சயனைடை கவனமாக எடுத்து உணவில் கலந்ததாக ஜோளி போலீசில் கூறியுள்ளார். ஷாஜூவை திருமணம் செய்வதற்காகத்தான்  தனது முதல் கணவர் ராய் தாமசையும்,  ஷாஜூவின் மனைவி சிலியையும் கொன்றதாக ஜோளி போலீசில்  தெரிவித்திருந்தார். இதற்கிடையே, போலீசார்  நடத்திய விசாரணையில்  ஜோளிக்கும், திருப்பூரில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரியும் மலையாளியான  ஜாண்சன்  என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. ஜாண்சனுக்கு மனைவி  மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவருடன் அடிக்கடி கோயம்புத்தூர்  உட்பட பல  இடங்களுக்கு சென்று ஜோளி உல்லாசமாக இருந்துள்ளார். கடந்த மாதம்  ஓணம் பண்டிகையையொட்டி,  இவர் கோவை சென்றதை போலீசார்  கண்டுபிடித்தனர்.

கட்டப்பனைக்கு ெசல்வதாக கணவர் ஷாஜூவிடம் கூறிவிட்டு ஜோளி கோவைக்கு  சென்று 2  நாட்கள் தங்கி இருந்துள்ளார். அப்போது அவர் ஜாண்சனுடன் ஒன்றாக   இருந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். ஜாண்சன்  குடும்பத்தினருடன்  ஜோளி நெருங்கி பழகி வந்துள்ளார். அவரது  குடும்பத்தினருடன் சினிமாவுக்கும், சுற்றுலாத் தலங்களுக்கும்  சென்று வந்துள்ளார். இந்த  நிலையில் ஜாண்சனுடன் ஜோளி ெநருங்கி பழகியதை  கவனித்த அவரது மனைவி கணவரை எச்சரித்ததுடன், ஜாேளியுடனான  தொடர்பையும் துண்டித்துள்ளார். இந்த  நிலையில்  தனது 2வது கணவர் ஷாஜூவை கொன்று ஜாண்சனை 3வதாக  திருமணம் செய்ய   திட்டமிட்டிருந்ததாக ஜோளி தெரிவித்துள்ளார்.

இதற்காக   ஷாஜூவின் மனைவி சிலியை கொன்றது போல் ஜாண்சனின் மனைவியையும் கொல்ல   திட்டமிட்டிருந்ததாகவும், ஷாஜூ ஆசிரியர் என்பதால் அவர் இறந்தால் அவரது பணி தனக்கு கிடைக்கும் என்று கருதியதாகவும் ஜோளி கூறியுள்ளார். இதற்கிடையே, கேரள  டிஜிபி  லோக்நாத் பெக்ரா கூடத்தாயி சென்று கொலை நடந்த வீடுகளை பார்வையிட்டார்.

ஷிலியை கொன்றது ஷாஜூவிற்கு தெரியும்

ஷிலியின் சகோதரன் சிஜோ செபாஸ்டின் போலீசில் கூறியதாவது: பல் மருத்துவமனையில் ஷிலி மயங்கி விழுந்ததாக ஜோளி என்னிடம் ேபானில் கூறினார். நான் அங்கு விரைந்து சென்றேன். அப்போது நாற்காலியில் மயங்கிய நிலையில் சிலி காணப்பட்டார். அருகில் ஷாஜூவும் ஜோளியும் இருந்தனர். அவர்களது முகத்தில் எந்த சலனமும் இல்லை. மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று நான் வற்புறுத்திய பின்னரே இருவரும் அதற்கு சம்மதித்தனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் இறந்தார். சிலியை கொன்றது குறித்து ஷாஜூவிற்கு தெரியும் என்று நா்ன் கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆடம்பர செலவு

ஜோளியின் தம்பி  நோபி கூறியதாவது: தனக்கு பணம் வேண்டும் என ஜோளி அடிக்கடி என்னையும்,  தந்தையையும் ெதாந்தரவு செய்து வந்தார். எவ்வளவு பணம் கொடுத்தாலும் அவருக்கு போதாது. நாங்கள் கொடுக்கும் பணத்தை எல்லாம் ஆடம்பரமாக செலவு செய்துவிடுவார். குழந்தைகளை படிக்க வைக்க பணம் இல்லை என கூறி  அடிக்கடி பணம் கேட்பார். ஆனால் அந்த பணத்தையும் தனது ஆடம்பர வாழ்க்கைக்கு  செலவு செய்து வந்தார். இதனால் குழந்தைகளின் கல்விச் செலவுக்கு நாங்கள் தனியாக  அவர்களது வங்கி கணக்கிலேயே பணம் செலுத்தி விடுவோம் என்றார்.

Related Stories: