மக்களை பற்றி கவலைப்படாத அதிமுக ஆட்சிக்கு பாடம் புகட்டுங்கள்: விக்கிரவாண்டியில் மு.க.ஸ்டாலின் பிரசாரம்

விக்கிரவாண்டி: மக்களை பற்றி கவலைப்படாத அதிமுக ஆட்சிக்கு பாடம் புகட்டுங்கள் என்று  விக்கிரவாண்டி பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.  விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்பாக்கு கூட்டணி தி.மு.க. வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பிரசாரத்தை நேற்று தொடங்கினார். காலையில் திண்ணை பிரசாரத்தையும் மாலையில் வீதி வீதியாக வாக்காளர்களை நேரில் சென்றும் வாக்கு சேகரித்தார். காணை, கல்பட்டு, மாம்பழப்பட்டு, மல்லிகைபட்டு, கெடார், சூரப்பட்டு, அன்னியூர், அத்தியூர் திருக்கை, வெங்கமூர் ஆகிய பகுதிகளில் உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது:  ஜெயலலிதா ஆசியில் அமர வைக்கப்பட்ட அதிமுக ஆட்சியில் 31 கேபினட் அமைச்சர்களும் கொள்ளை கூட்டமாகவும், அதன் தலைவராக எடப்பாடியும் இருக்கிறார். நாட்டை பற்றியும், மக்களை பற்றியும் கவலைப்படாத, கொள்ளையடிப்பதை மட்டுமே நோக்கமாக கொண்ட ஆட்சி. மத்திய பாஜக ஆட்சியின் துணையோடு அடித்த கொள்ளை பணத்தை பதுக்கவே முதல்வர், அமைச்சர்கள் வெளிநாட்டுக்கு சென்றனர். முதலீடுகளை கொண்டு வருவதற்காக அல்ல.

இருக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்குள் சுருட்ட வேண்டியதை சுருட்டிக்கொண்டு போக வேண்டுமென நினைக்கிற அதிமுகவுக்கு பாடம் புகட்ட நல்ல வாய்ப்பு விக்கிரவாண்டி மக்களுக்கு கிடைத்திருக்கிறது. 8 ஆண்டுகளாக ஆட்சியில் தி.மு.க. இல்லாவிட்டாலும், கருணாநிதியின் லட்சியமான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஏழை, எளிய மக்களுக்காக பாடுபட்டு வருகிறது. குறிப்பாக வன்னியர் சமூகத்திற்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்றுத் தந்தது முன்னாள் முதல்வர் கலைஞர்தான். 1989ம் ஆண்டு தேர்தலில் கூறிய வாக்குறுதிப்படி, தேர்தல் முடிந்ததும், வன்னியர் சமுதாயத்தின் பிரதிநிதிகளையெல்லாம் அழைத்து கலந்து பேசினார். ஆட்சி அமைந்த 43 நாட்களிலே மிக பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடான 20 சதவீதத்தை தந்தவர் கருணாநிதி.

1987-ம் ஆண்டு வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு நடந்த சாலை மறியல் போராட்டத்தை பற்றி அதிமுக கொஞ்சமும் கவலைப்படவில்லை. ஆனால் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 21 வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு ₹3 லட்சம் நிவாரணம் வழங்கியவர், போராட்டத்தில் ஈடுபட்ட 42 ஆயிரம் பேர் மீது அதிமுக போட்ட வழக்குகளையெல்லாம் ரத்து செய்தவர்தான் கருணாநிதி. இன்னும் சொல்லப்போனால், அந்த குடும்பத்துக்கு அரசின் சார்பில் பென்ஷன் கிடைக்க காரணமானவர் கருணாநிதி.   பு.தா. அருள்மொழி, இளங்கோவன் உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட குண்டர் தடுப்பு சட்டங்களை ரத்து செய்தவர் கருணாநிதி. வன்னியர் சமுதாய தலைவர்களில் ஒருவரான ராமசாமி படையாட்சியாருக்கு சிலை அமைக்க வேண்டுமென வாழப்பாடி ராமமூர்த்தி, சி.என்.ராமமூர்த்தி ஆகியோர் கலைஞரிடம் கோரிக்கை வைத்தனர். இதனையேற்று, அப்போது மேயராக இருந்த என்னை அழைத்து, இடத்தை ஒதுக்கி தருமாறு கூறினார். அதன்படி சென்னையில் அறிஞர் அண்ணாசாலையில் சிலை வைத்தவர் கருணாநிதி.

1952ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. போட்டியிடவில்லை. அந்த தேர்தலில் போட்டியிட்ட காமன் வீல் கட்சியை சேர்ந்த ராமசாமி படையாட்சியார் போட்டியிட்டார். அப்போது அவருக்கு ஆதரவை தி.மு.க. தெரிவித்தது. அந்த தேர்தலில் வெற்றிப்பெற்று 1954 முதல் 1957  உள்ளாட்சித்துறை அமைச்சராக திறம்பட பணியாற்றினார். 2 முறை எம்.பி.யாக இருந்தவர். தி.மு.க.வில் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த வெங்கட்ராமனுக்கு கேபினட் அமைச்சர் பதவி வாங்கிக்கொடுத்தது தி.மு.க.தான்.  கருணாநிதியின் செயலாளராக இருந்த காசி  விஸ்வநாதன், பல்கலைக்கழக துணைவேந்தராக பொற்கோ, வன்னியர் சொத்துகளை பாதுகாக்க நலவாரியம் அமைத்து, அதற்காக வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த சந்தானத்தை நியமிக்க செய்தார். மாநில தேர்தல் ஆணையராக சந்திரசேகர் என வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு பல்வேறு பொறுப்புகள், பதவிகளை கொடுத்தவர் கருணாநிதிதான்.

அதேநேரத்தில் ஒரு கட்சி  வன்னியர் சமுதாயத்தை வைத்து,  கொள்ளையடித்துக்கொண்டிருக்கிறது. கூட்டணி என்ற பெயரில் பேரம் பேசி வருகின்றனர். இதையெல்லாம் நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும் என்பதற்காக இதனை கூறுகிறேன். ஏற்கனவே நான் கூறியபடி ஏ.ஜி. கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் உள்ளிட்ட வன்னியர் கோரிக்கைகளை எல்லாம் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றுவோம்.

இவ்வாறு மு.க. ஸ்டாலின் பேசினார்.

நீட் மூலம் சட்டவிரோத லாபம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சிதைந்த நீட் தேர்வு முறையால், மருத்துவக் கல்வி பயில ஆர்வமுடைய மாணவர்களும், அவர்களது பெற்றோரும் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில், ஊழல் மற்றும் வரி ஏய்ப்புச் செய்பவர்கள் நீட் மூலம் சட்டவிரோத லாபம் ஈட்டுகின்றனர்.பணக்காரர்கள் மட்டுமே நீட் தேர்வுக்குத் தயாராக முடியும் என்பதை வருமானவரித் துறைச் சோதனைகள் வெளிப்படுத்தியுள்ளதோடு, நீட் தேர்வு, ஏழைகளுக்கு எதிரானது என்ற நமது கூற்றை, இச்சோதனைகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன.

Related Stories: