ஆண்டவனுக்கே மனு அனுப்புங்க தெறிக்க விடும் அதிகாரி

நெல்லை மாநகரத்தில் சட்டம் ஒழுங்கு காவல் நிலையம் உள்பட மொத்தம் 16 காவல் நிலையங்கள் உள்ளன. இதில் புகழின் உச்சியிலுள்ள போலீஸ் அதிகாரி ஒருவர் கட்டுப்பாட்டிலுள்ள காவல் நிலையத்தில் வரும் சிறியது முதல் பெரியளவிலான வில்லங்க புகார் மனுக்களுடன் வரும் புகார்தாரர், எதிர்மனுதாரர்களிடம் ஒரு கட்டணத்தை நிர்ணயித்து தனக்கு கீழே உள்ள போலீசாரை நம்பாமல் தானே நேரிடையாக வசூலில் இறங்கி விடுகிறாராம். போலீஸ் நிலையத்திற்கான கார்பன் பேப்பர், பேனா வாங்குவது மற்றும் விசாரணை கைதிகளுக்கு சாப்பாடு ஆகியவற்றை போலீசாரின் பாக்கெட்டிலிருந்து செலவிட சொல்கிறாராம். இதனால் பொறுத்து பொறுத்து பார்த்த காவலர்கள் சென்னை தலைமையிட லஞ்ச ஒழிப்பு உயரதிகாரியிடம் போட்டு கொடுத்தோடு மட்டுமல்லாமல் மொட்டை மனுவும் அனுப்பி விட்டனர். இதனையறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரி தனக்கு கீழ் உள்ள காவலர்களிடம் ஆண்டவனுக்கே புகார் மனு அனுப்பினாலும் கூட நான் கவலைப்பட போவது இல்லை, என்னை யாரும் அசைக்க கூட முடியாது என காவலர்களை தெறிக்க விடுவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

பண மழையில் நனையும் காவல் நிலையம்

மலைக்கோட்டை மாநகரில் கஞ்சா விற்பனை கொடி கட்டி பறக்கிறது. திருச்சி- திண்டுக்கல் சாலையில் மாநகர் எல்லை முடிவில் உள்ள காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 24 மணி நேரமும் மது விற்பனை கொடி கட்டி பறக்கிறது. இந்த பகுதியில் எந்த நேரமும் டாஸ்மாக் சரக்குகள் கூடுதல் விலைக்கு கிடைக்கிறதாம். இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்ஐக்கு மாமூல் கொட்டுவதால் அவர்கள் கண்டும் காணாமல் உள்ளனர். அதுபோல் கஞ்சா விற்பனையும் படுஜோராக நடக்கிறதாம். ஏற்கனவே மாநகரில் பணியில் இருந்த ‘’சு’’ பெயர் கொண்ட இன்ஸ்பெக்டர் தனக்கு வேண்டியவர்களை பிடித்து புறநகருக்கு மாற்றலாகி சென்றார். அதிலும் மாநகர எல்லை முடிவில் உள்ள இந்த காவல் நிலையம் தான் வேண்டும் என கேட்டு பெற்று சென்றுள்ளார். அங்கு சென்றவருக்கு கல்லாவில் பணம் கொட்டோ கொட்டுவென கொட்டுகிறதாம். இதற்கு ஜோடி கட்டாக எஸ்ஐயும் விசுவாசம் காட்ட இருவரின் காட்டிலும் பணமழை கொட்டுகிறது. இதற்கு யார் தான் கடிவாளம் போடுவது என தெரியாமல் பொதுமக்கள் விழிக்கின்றனர்.

கமிஷனு…  தடுத்தா டென்சனு...! எங்க பொழப்புல கை வைக்குறீங்களே

திருப்பூர் குமரன் ரோட்டின் வாகன போக்குவரத்தை வைத்தே, திருப்பூரின் பரபரப்பை கணித்துவிடலாம். இந்த ரோடு, திருப்பூர் வடக்கு காவல்நிலைய எல்லைக்கு உட்பட்டது. இங்கு நடைபாதை கடைகள், தள்ளுவண்டி கடைகள் என ஏராளம் உள்ளன. இவை, வாகன போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தாலும், உள்ளூர் போலீசார் கண்டுகொள்வதில்லை. காரணம், சட்டம்-ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து பிரிவு என அனைத்து பிரிவு போலீசாரும், மாமூலுக்கு அடிமை. ‘’வாகனம் நிறுத்த முடியாத அளவுக்கு இப்படி போக்குவரத்துக்கு இடையூறாக கடை வைத்துள்ளீர்களே...’’ என வாகன ஓட்டிகள் யாராவது கேள்வி எழுப்பினால், இங்குள்ள கடைக்காரர்கள் டென்சன் ஆகிறார்களோ, இல்லையோ, திருப்பூர் வடக்கு காவல்நிலைய போலீசார் டென்சன் ஆகிவிடுகின்றனர். குறிப்பாக, போக்குவரத்து பிரிவு போலீசார் கொதித்து எழுகின்றனர். ‘’ஏம்பா.. எங்க பொழப்புல கை வைக்கிறீங்களே...’’ என வாகன ஓட்டிகளிடம் சமாதானம் செய்து, அனுப்பி வைத்துவிடுகின்றனர். இப்பகுதியில் வடமாநில இளைஞர் ஒருவர் தள்ளுவண்டியில் ஐஸ் கிரீம் கடை வைத்துள்ளார். இங்கு, அடிக்கடி ஐஸ் கிரீம் சுவைப்பதும் நடக்குது.

Related Stories: