மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ சிறப்பம்சங்கள்

தற்போது இந்தியாவில் பண்டிகை காலம் நெருங்கி வருகிறது. இதை பயன்படுத்திக்கொண்டு புதிய கார்களை அறிமுகம் செய்ய தொடங்கியுள்ளன. மாருதி நிறுவனம், மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ என்ற காரை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த கார், பெட்ரோல் இன்ஜின் தேர்வில் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி வகை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். ஸ்டான்டர்டு, எல்எக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ ப்ளஸ் ஆகிய நான்கு வேரியண்ட்டுகளில் வந்துள்ளது. இந்த காரின், ஸ்டான்டர்டு மற்றும் எல்எக்ஸ்ஐ வேரியண்ட்டுகள் லிட்டருக்கு 21.4 கிமீ மைலேஜ், விஎக்ஸ்ஐ மற்றும் விஎக்ஸ்ஐ ப்ளஸ் மேனுவல் கியர்பாக்ஸ் வேரியண்ட்டுகள் லிட்டருக்கு 21.7 கிமீ மைலேஜ், விஎக்ஸ்ஐ மற்றும் விஎக்ஸ்ஐ ப்ளஸ் ஏஎம்டி கியர்பாக்ஸ் வேரியண்ட்டுகள் லிட்டருக்கு 21.7 கிமீ மைலேஜ் வழங்கும் என மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கார், புதிய க்ராஷ் டெஸ்ட் விதிமுறைகளுக்கு ஏற்ற கட்டுமானம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை பெற்றுள்ளது. விலை குறைவான வேரியண்ட்டுகளில் ஒரு ஏர்பேக், டாப் வேரியண்ட்டில் டியூவல் ஏர்பேக் உள்ளன. தவிர, ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஹை ஸ்பீடு அலர்ட் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெற்றுள்ளது. இந்த காரின் பேஸ் வேரியண்ட் 726 கிலோ எடை கொண்டது. மாருதி ஆல்ட்டோ 800 காரைவிட எடை குறைவானது.

மாருதி நிறுவனத்தின் ஹார்ட்டெக் பிளாட் பார்மில் எஸ் பிரெஸ்ஸோ கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார், எஸ்யூவி போன்ற வடிவமைப்பை பெற்றுள்ளது. 180 மி.மீ கிரவுண்ட் கிளிரயன்ஸ் கொண்டது. அத்துடன், பிளாஸ்டிக் பம்பர், பிளாஸ்டிக் கிளாடிங் சட்டங்கள், வலிமையான பானட் அமைப்பு என கார் பிரியர்களை கவர்ந்து இழுக்கிறது. அதாவது, மிக குறைவான விலை மைக்ரோ எஸ்யூவி மாடலாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்த கார், 3,565 மி.மீ நீளம், 1,520 மிமீ அகலம் பெற்றிருக்கிறது. மாருதி ஆல்ட்டோ கே10 காரைவிட நீளத்தில் 120 மி.மீ வரையிலும், அகலத்தில் 5 மி.மீ வரையிலும் கூடுதலாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரின் வீல் பேஸ் 2,380 மி.மீ ஆக உள்ளது. இந்த காரில் அலாய் வீல்கள் இல்லை. விலை குறைவான வேரியண்ட்டுகளில் 13 அங்குல ஸ்டீல் வீல்களும், உயர் வகை வேரியண்ட்டுகளில் 14 அங்குல ஸ்டீல் வீல்களும் உள்ளன. 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே ஆகிய செயலிகளை சப்போர்ட் செய்யும். டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பை பெற்றிருக்கிறது.

மினி பிராண்டின் பிரிமீயம் கார்களை நினைவூட்டுவது போன்ற சென்ட்ரல் கன்சோல் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த ரகத்தில், முதல்முறையாக ஸ்டீயரிங் வீலில் ஆடியோ சுவிட்சுகள் கொடுக்கப்பட்ட முதல் கார் மாடலாக வந்துள்ளது. ஹெட்ரெஸ்ட்டுகளில் அட்ஜெஸ்ட் வசதி இல்லை. 12 வோல்ட் சார்ஜர், கப் ஹோல்டர், அதிக இடவசதியுடன் கூடிய இன்டீரியர் ஆகியவை இதன் முக்கிய அம்சங்கள் ஆகும். இந்த கார், சிவப்பு (சாலிட் பயர் ரெட்), நீலம் (பியர்ல் ஸ்டாரி புளூ), ஆரஞ்ச் (சாலிட் சிஸில் ஆரஞ்ச்), சாம்பல் (மெட்டாலிக் கிரானைட் க்ரே) சில்வர் (சில்க்கி சில்வர்) மற்றும் வெள்ளை (சுப்பீரியர் ஒயிட்) ஆகிய வண்ண தேர்வுகளில் கிடைக்கிறது. ஆன்லைன் மூலமாக அல்லது டீலர்கள் வாயிலாகவோ ₹11,000 முன்பணம் செலுத்தி, முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த காருக்கான டெலிவிரி உடனடியாக துவங்கப்பட இருக்கிறது. ₹3.69 லட்சம் என்ற மிக சவாலான விலையில் புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ விற்பனைக்கு வந்துள்ளது.

Related Stories: