செயல்திறனில் மிரட்டும் மஹிந்திரா எலெக்ட்ரிக்!

காம்பேக்ட் எஸ்யூவி ரக மார்க்கெட்டில் மஹிந்திரா எக்ஸ்யூவி 300 சிறந்த பிரிமீயம் தேர்வாக மாறி இருக்கிறது. விற்பனையிலும் நல்ல எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது. சாங்யாங் டிவோலி எஸ்யூவியின் அடிப்படையில் ரீபேட்ஜ் செய்யப்பட்ட இந்த எஸ்யூவி ரக கார், டிசைன், வசதிகள், செயல்திறன்மிக்க இன்ஜின் தேர்வு என நன்மதிப்பை பெற்றுள்ளது. தற்போது பெட்ரோல், டீசல் இன்ஜின் மாடல்களில் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைத்து வருகிறது. இந்நிலையில், பேட்டரியில் இயங்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 என்ற எஸ்யூவி ரக காரும் உருவாக்கப்பட்டு வருகிறது. மஹிந்திரா எஸ்210 என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்படும் இந்த மாடலானது தற்போது சாலை சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டு, ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த காரின், மின்சார மாடல் குறித்த சில விஷயங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

இந்த எலெக்ட்ரிக் மாடல், செயல்திறனில் அசத்தலாக இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன. அண்மையில் அறிமுகமாகி ஹிட் அடித்துள்ள ஹூண்டாய் கோனா காரை நெருங்கும் அளவிலான செயல்திறனை இந்த கார் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் கோனா காரில் 39.2 kW பேட்டரியும், மின்மோட்டாரும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மின் மோட்டார் 134 பிஎச்பி பவரையும், 395 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. இந்தநிலையில், மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் காரில் 40kW பேட்டரியும், மின் மோட்டாரும் இணைந்து 128 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் என தகவல்கள் கூறுகின்றன.

மேலும், ஹூண்டாய் கோனா காரின் பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் 452 கிமீ தூரம் பயணிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதேபோல், இப்புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 மின்சார மாடலின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 300 கிமீ தூரம் வரை பயணிக்கும் என கூறப்படுகிறது. ஹூண்டாய் கோனா எஸ்யூவி ரக காரைவிட மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் நிச்சயம் விலை குறைவாக இருக்கும் என்பதால், அதிக வரவேற்பை பெறும் வாய்ப்புகள் உள்ளன.


Tags : Mahindra Electric ,intimidates in performance!
× RELATED நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல்...