அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சுக்கு கண்டனம் காமராஜரின் பெயரை உச்சரிக்க அதிமுகவினருக்கு தகுதியில்லை : கே.எஸ்.அழகிரி அறிக்கை

சென்னை: காமராஜர் தொடர்பான அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை :நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு ஆதரவாக திமுக - காங்கிரஸ் கூட்டணி கட்சியினரின் ஒருங்கிணைந்த கடுமையான உழைப்பை எதிர்கொள்ள முடியாத நிலையில் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,  காமராஜரின் உடலை சென்னை கடற்கரையில் அடக்கம் செய்வதற்கு காங்கிரஸ் கட்சியினர் கோரியதை அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் மறுத்துவிட்டதாக முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற வகையில் அவதூறு குற்றச்சாட்டு ஒன்றை கூறி இருக்கிறார்.

Advertising
Advertising

இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக மறுக்கிறேன், கண்டிக்கிறேன்.உண்மைக்கு புறம்பான, தவறான தகவல்களை ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்ட செயலாகும். காமராஜரின் பெயரை உச்சரிப்பதற்குக் கூட அதிமுகவினர் எவருக்கும் தகுதியில்லை.  காமராஜர் நினைவை தமிழக மாணவ - மாணவியர்கள் பயிலும் அனைத்து பள்ளிகளிலும் அவரது பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட வேண்டுமென்று சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றியவர் அன்றைய முதல்வர் கலைஞர். அதற்கு அரசு நிதியுதவியாக ஆண்டுக்கு ரூபாய் 1 கோடியே 31 லட்சம் ஒதுக்கியவரும் கலைஞர் தான். ஆனால், அதிமுக ஆட்சி அமைந்தவுடன் அதற்கான நிதி மறுக்கப்பட்டு கல்வி வளர்ச்சி நாளும் கொண்டாடப்படுவதில்லை. இனியும் ராஜேந்திர பாலாஜி போன்றவர்கள் மலிவான அரசியலுக்கு காமராஜர் பெயரை பயன்படுத்தினால் கடும் விளைவுகள் ஏற்படும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: